உங்கள் குழந்தைக்கு நீங்கள் சொல்லி கொடுக்க வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று அவர்களின் பழக்க வழக்கங்கள். பழக்கவழக்கங்களே ஒரு நபரின் குண நலன்களை உருவாக்குகின்றன. உங்கள் குழந்தைகள் உங்களையே முன் மாதிரியாக பின்பற்றுகிறார்கள். நீங்கள் எதை அதிகம் செய்கிறீர்களோ, அதையே அவர்களும் செய்வார்கள்.
எனவே நீங்கள் செய்ய கூடிய எந்த ஒரு செயலையும் கவனத்துடன் செய்ய வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள். குழந்தைகள் நீங்கள் செய்பவற்றையே திரும்ப செய்வதால், நல்ல பழக்கங்களையே நீங்களும் கடைபிடிக்க துவங்குங்கள். உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் கட்டாயம் உண்டாக்க வேண்டிய 5 நல்ல பழக்கங்களை இங்கு பார்ப்போம்.
1 ஆரோக்கியமான உணவு உண்ணுதல்
இது இளம் வயதிலிருந்தே குழந்தைகளில் கற்பிக்கப்பட வேண்டிய ஒரு பழக்கம். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளின் நன்மைகளை புரிய வைத்து, தினசரி அவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான உணவை கொடுக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், குழந்தைகளும் வருங்காலத்தில் அவற்றின் முக்கியத்துவம் உணர்ந்து, ஆரோக்கியமான உணவையே தேர்வு செய்ய விரும்புவார்கள். சத்துகளற்ற நவநாகரிக உணவுகளை உண்பவர்களை காட்டிலும், இவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன், அழகான உடல் தோற்றத்துடனும் காணப்படுவார்கள்.
2 தினமும் இரு முறை பல் துலக்குதல்
பெரும்பாலான பெரியவர்களும் செய்யாத ஒன்று இது. குழந்தைகள் தினமும் பல் துலக்குவதை மிகவும் சலிப்புடன் செய்வார்கள், அதிலும் ஒரே நாளில் இரு முறை பல் துலக்குவது என்பது அவர்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். எனவே தினமும் இரு முறை பல் துலக்க வேண்டும் என்பதை விதிமுறையாய் கடைபிடியுங்கள். இது பல் பிரச்சனையைத் தவிர்க்க மட்டுமே உதவுகிறது, ஆனால் உங்கள் வாழ்க்கையில் நீண்ட காலத்திற்கு உங்கள் பற்களை பாதுகாக்க உதவுகிறது. உங்கள் குழந்தைகள் இரவு உறங்க செல்லும் முன் பல் துலக்கினார்களா, அதிலும் குறிப்பாக இனிப்பு மற்றும் சாக்லேட் போன்ற தின்பண்டங்களை உண்ட பிறகு பல் துலக்கினார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
3 மதிய உணவிற்கு பிறகு வாய் கொப்பளிப்பது
இது உங்கள் குழந்தைக்கு கற்று கொடுக்க வேண்டிய மிக முக்கியமான பழக்கங்களில் ஒன்றாகும். மதிய உணவின் பிறகு வாயில் இருக்கும் உணவு துகள்கள் பற்களை பாதிக்க கூடும். எனவே வாய் கொப்பளிப்பதன் மூலன் பற்கள் சொத்தையாவது தவிர்க்கப்படுவதோடு, ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
4 வெளியில் விளையாடுவது
குழந்தைகளுக்கு இயற்கையான காற்று கிடைக்கவும், உடல் பயிற்சி செய்தது போலாகவும் அவர்களை வெளியில் விளையாட அனுமதிக்க வேண்டும். வீட்டின் உள்ளே அதிக நேரம் செலவழிக்கும் குழந்தைகள் ஆரோக்கியமற்ற உடல் நிலை மற்றும் குறைவான கல்வியறிவு உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால் வெளியில் சென்று விளையாடும் குழந்தைகள் உடல் ஆரோக்கியத்தோடும், மிக அதிக ஆற்றலோடும் இருக்கிறார்கள். மேலும் குழந்தைகளுக்கு சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி கிடைக்கிறது.
5 நல்ல சுகாதாரத்தை பராமரித்தல்
இதில் கை கழுவுதல், குளியல், துணி துவைத்தல் மற்றும் பல அடங்கும். சுகாதாரம் என்பது ஒரு நபரை மரியாதைக்குரியவராக மாற்றுகிறது. மேலும் இது உடலில் நுழையும் பல வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை தடுக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு சாப்பிடும் முன் கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். வெளியில் சென்று வந்தால், கைகளை கழுவ பழக்க வேண்டும். சுகாதாரமாக கழிவறையை பயன்படுத்த கற்று கொடுக்க வேண்டும். கால்களில் செருப்பு அணிய கற்று கொடுங்கள். இது போன்ற பழக்கங்கள் குழந்தைகளுக்கு கற்று கொடுக்க வேண்டிய முக்கியமான பழக்கங்களாகும்.
ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா என்பார்கள். எனவே குழந்தைகளின் இளம் வயதில் இவற்றை கற்பிக்க வேண்டியது, மிகவும் அவசியமான ஒன்று. குழந்தைகள் வளர்ந்ததும் மாற்றலாம் என்பது முடியாத ஒன்று. எனவே அவர்களுக்கு ஆரம்பக்காலத்திலேயே அனைத்தையும் கற்று கொடுத்து, அவர்களின் உடல் நலனை மேம்படுத்தலாம்.