பெண்கள், தங்கள் வாழ்வில் பல அவதாரங்களைத் தனதாக்குகின்றனர்; முதலில் மகளாக, பின் மனைவியாக, பின் தாயக என பல மாறுதல்கள், அவர்தம் வாழ்வில் நிகழ்கிறது. ஒவ்வொரு மாறுதலுக்கு அவர்கள் தங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள், பார்க்கும் நிகழ்ச்சிகள், உண்ணும் உணவுகள் என அனைத்திலும் மாறுதல்களை சந்திக்கின்றனர்.
அதில், தாயாக மாறும் பொழுது, பெண்களின் உயிருக்குள் மற்றோரு உயிர் வந்துவிடுகிறது; அவ்வுயிரை பூமிக்கு கொண்டு வந்த பிறகு, அதற்காக வாழ வேண்டியிருக்கிறது. இந்த சமயங்களில், பெண்கள் மேற்கொள்ள வேண்டிய உணவு கட்டுப்பாடு குறித்து, இப்பதிப்பில் காணலாம்..
கர்ப்ப காலத்தில்..,
1. இரும்பு மற்றும் நார்ச்சத்து..!
கர்ப்பிணிகள், கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலைத் தவிர்க்க நார்ச்சத்து நிறைந்த காய்கள், பழங்கள் மற்றும் கூழ், உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்; இரத்தப்போக்கு மற்றும் ஹீமோகுளோபினின் அளவினை கட்டுப்பாட்டில் வைக்க இரும்புச் சத்துக்கள் நிறைந்த உணவுகளை மேற்கொள்வது நல்லது.
2. பயறு வகைகள்..
நல்ல புரதம் நிறைந்த பயறு வகைகளை உட்கொள்ள வேண்டும்; இது உங்கள் உடலுக்கு தேவையான சக்தியைத் தந்து, உடலை சமநிலையில் வைக்க உதவுகிறது.
3. கார உணவுகள்..
கர்ப்பிணிகள், கார உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பது, உடல் நலத்திற்கு நல்லது; மற்றும் குழந்தையின் உடலுக்கும் நல்லது.
4. எண்ணெய் உணவுகள்..
எண்ணெய் உணவுகளைத் தவிர்ப்பது நல்லது; ஏனெனில், அது உங்கள் உடலில் இரத்தம் கட்டிப்படுதலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் இவ்வகை உணவுகள், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
5. ஆல்கஹால்
கர்ப்ப காலத்தில் மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல் உங்கள் உடலை பலவீனப்படுத்தி, குழந்தையின் உயிரைக் கொல்லக் கூடியதாய் உள்ளது; ஆகையால், இவ்வகைப் பழக்கங்களை கர்ப்ப காலத்தில் தவிர்ப்பது நல்லது.
6. மருந்துகள்..
மருத்துவரின் ஆலோசனை இல்லாது, மருந்து மற்றும் மாத்திரைகள் உட்கொள்வதைத் தவிக்க வேண்டும்.
பிரசவத்திற்குப் பின்..,
7. காஃபின்..
பிரசவத்திற்குப் பின், காஃபின் உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது தாய்ப்பால் சுரப்பினை பாதிக்கும். காஃபின் கலந்த தாய்ப்பாலை குழந்தைக்குக் கொடுக்கும் போது, அது குழந்தையின் உடலில் உறக்கமின்மையை ஏற்படுத்தும்.
8. உடல் எடையைக் குறைக்கும் உணவுகள்..!!
பிரசவத்தால், ஏற்பட்ட உடல் எடையினைக் குறைக்க, கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு குறைவான உணவுகளை, உண்ணுவது நல்லது. கருத்தரிக்கும் முன்னிருந்த தோற்றத்தினை, உங்கள் சரியான உணவுக் கட்டுப்பாட்டு முறையினால், திரும்பப் பெறலாம்.