vuthdukalaiyum-mugathaiyum-iyarkaiyai-alagakka

அழகை விரும்பாத பெண்களே இல்லை, அழகை விரும்பாதோர் பெண்களே இல்லை எனும் அளவிற்கு பெண்களிடையே அழகின் மோகம் பரவி கிடக்கிறது. தன்னை அழகாக வெளிக்காட்ட பெண்கள் பல இரசாயன பூச்சுகளை பயன்படுத்துகிறார்கள். சிலர் அழகு நிலையங்களுக்கு சென்று தங்கள் அழகை கூட்ட முயற்சிக்கிறார்கள். இதெற்கென அவர்கள் செய்யும் செலவுகளை கணக்கில் கொள்வதே கடினமான ஒன்று. மேலும் உதட்டு சாயங்களையும், முக பூச்சுக்களையும் கடைகளில் வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவற்றை நாம் இயற்கை வழிகளிலேயே பெறலாம். அவற்றை செய்வதற்கான வழிமுறைகளை இங்கு பார்க்கலாம். 

உதடுகளை இயற்கை முறையில் அழகாக்க

முக அழகை முழுமையாய் வெளிப்படுத்துவதில், கண்களுக்கு இணையாக உதடுகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. உடலிலுள்ள சருமம் 28 நாட்களுக்கொரு முறை வெளித்தோலை உதிர்க்கிறது. அதுவே உதடுகளில் உள்ள சருமம் உதிர மாதக் கணக்கில் ஆகும். உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அதனால் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறி அசிங்கமாகக் காட்சியளிக்கவும் கூடும். எனவே இது தவிர்க்கப்பட வேண்டும். சரியான பராமரிப்பு இல்லாததால்தான் உதடுகள் தோலுரிந்தும், வறண்டும் காணப்படுகின்றன. அவற்றை இயற்கையாக அழகாக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.

1 தினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் மென்மையாக மாறும்.

2 வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா போல மென்மையாக மாறும்.

3 முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை அழகு பெறும்.

4 தினமும் நெய் அல்லது வெண்ணெயை உதடுகளில் தடவி வர, அவற்றில் உள்ள வெடிப்புகள் நீங்கி, உதடுகள் வழவழப்பாகும்.

5 முட்டையின் வெள்ளைக் கருவோடு அரை ஸ்பூன் பாதாம் பவுடரைக் கலந்து, அத்துடன் கொஞ்சம் பாலாடையையும் சேர்த்து உதடுகளில் தடவி வர, வறண்ட உதடுகள் குணமாகும்.

6 இரண்டு டீஸ்பூன் ஆலிவ் எண்ணையுடன் இரண்டு கிராம் தேன் மெழுகும், பன்னீரும் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை சிவப்பாகவும், மென்மையாகவும் மாறும்.

7 கொத்தமல்லிச் சாற்றை உதடுகளில் தினமும் தடவி வந்தால் அவை இயற்கையிலேயே சிவப்பு நிறத்தைப் பெறும்.

8 புதினா, கொத்தமல்லி இலையை அரைத்து தினமும் உதட்டில் தடவி வந்தால் உதடு சிவப்பாக மாறும்.

முகத்தை அழகுபடுத்த இயற்கை முக பூச்சுகள்(facial)

அனைவரும் முகத்தை அழகுபடுத்த பல முறைகளை கையாள்வார்கள். சிலர் அழகு நிலையங்களுக்கு சென்று பல முகப்பூச்சுகளை பயன்படுத்த முயற்சிப்பார்கள். அவற்றிற்கு வீண் செலவு செய்வதை தவிர்த்து, நாம் வீட்டிலேயே முயற்சிக்கலாம்.

1 முட்டை வெள்ளை கருவை மட்டும் நன்கு நுரை வரும் வரை அடித்து, தேன் கலக்கவும். முகத்தில் கண்ணைத் தவிர மற்ற இடங்களில் தடவவும். 10 நிமிடம் கழித்து குளிர் நீரால் கழுவவும். இவ்வாறாக வாரம் இருமுறை செய்து வந்தால் தோல் சுருக்கம் இல்லாமல் இளமையுடன் இருக்கும்.

2 பாலையும் ஓட்மீலையும் கலந்து மிதமான சூட்டில் பசை போல் ஆனதும் பன்னீர் சேர்க்கவும். இளம் சூட்டிலேயே முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து முகம் கழுவவும். இந்தப் பூச்சு வயோதிகத் தன்மையைக் குறைக்கும் .

3 பால் பௌடர், நீர் மற்றும் பால் மூன்றையும் நன்கு குழைய கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவவும். 10 நிமிடத்திற்குப் பிறகு முதலில் இளம் சூடான நீரிலும், பின் குளிர் நீரிலும் கழுவவும்.முகம் மிருதுவாக இருக்கும்.

4 வாழைப்பழத்துடன் கடலை மாவு, தேன் மற்றும் சிறிது மஞ்சள் கலந்து, முகத்தில் தடவவும். 10 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரால் முகம் கழுவவும்.

நம்மால் முடிந்தவரை, இயற்கையாக நிரந்தரமாக மாற்ற முயற்சியுங்கள். சிறிது நாட்களில் கேடு விளைவிப்பவற்றை தவிர்த்திடுங்கள்.

Leave a Reply

%d bloggers like this: