நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சனை உடலில் போதிய அளவு ரத்த சிவப்பணுக்கள் இல்லாதது தான். நாம் சாப்பிடும் துரித உணவுகள் உடலில் கொழுப்பையும் நோயையும் அதிகரிக்கின்றனவே தவிர, நம்முடைய உடலுக்குப் போதிய ஹீமோகுளோபின் கிடைப்பதில்லை.
ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்ய நாம் என்னதான் மருந்துகள், அயர்ன் ஃபோலிக் மாத்திரைகள் சாப்பிட்டாலும் இயற்கை உணவுகள் மூலம் மட்டும் ஆரோக்கியத்தையும் ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கச் செய்ய முடியும்.
அத்தகைய ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும் சில உணவுகளைப் பற்றி காண்போம்..!
முருங்கைக் கீரை
முருங்கைக் கீரையைக் மூன்று கைப்பிடி அளவு எடுத்து, ஒரு கைப்பிடியளவு துவரம் பருப்புடன் சேர்த்துச் சமைத்து இறக்கும் முன் ஒரு கோழி முட்டையை உடைத்து விட்டுக் கிளறி, ஒரு தேக்கரண்டி அளவு நெய்யும் சேர்த்துத் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உண்டாகும். உடல் வலிமையோடு இருக்கும்.
பொன்னாங்கன்னிக்கீரை
பொன்னாங்கன்னிக்கீரையைப் பொரியல் செய்து பகல் உணவுடன் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகி உடல் பலம் பெறும்.
புதினாக் கீரை
புதினாக் கீரையை ஆய்ந்து, ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்கவைத்து இறக்கி வடிக்கட்டி காலை, மாலை அரை டம்ளர் வீதம் எடுத்து அரை டம்ளர் பசுவின் பால் கலந்து, சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியாகும் (நீரிழிவு நோயாளிகள் சக்கரையை தவிர்க்கவும்)
அரைக் கீரை
அரைக் கீரையுடன் பருப்பு சேர்த்துச் சமைத்து பகல் சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் பதிய இரத்தம் உற்பத்தியாகும்.
திராட்சையும் பாலும்..
தினமும் உலர்ந்த திராட்சையோ அல்லது பச்சை திராட்சையோ சாப்பிட்டு வர ரத்தம் தூய்மை பெறும். தினசரி 20 கிராம் பப்பாளிப் பழத்தைத் சாப்பிட்டு ஒரு டம்ளர் காய்ச்சிய பாலை குடித்து வந்தால், புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
அத்திப்பழம்
அத்திப்பழம் இரத்த விருத்திக்கு முழுப்பலன் அளிக்க வல்லது, “ஹீமோகுளோபின்” குறைவு காரணமாக உடம்பு வெளுத்து, சுறுசுறுப்பின்றி சோர்வாக இருப்பவர்கள், தினசரி சீமை அத்திப்பழம் ( நாட்டு மருத்துக் கடைகளில் கிடைக்கும் ) சாப்பிட்டு வருவது நல்லது.