ஒவ்வொரு பெற்றோர்களும், தங்கள் குழந்தை அறிவாக இருக்க வேண்டும், ஆரோக்கியமாக வளர வேண்டும் என்ற எண்ணம் கொள்வர். அதேசமயம், அவர்களின் புறத்தோற்றமும் அழகாக இருக்க வேண்டும் என்றே எண்ணுவர். அதிலும் குழந்தைகளின் முடி அழகாக ஆரோக்கியமாக வளர வேண்டும் என்று விருப்பம் கொள்வர். குழந்தைகளின் முடியானது, 3-4 மாத காலங்கள் அங்குலம் அங்குலமாக வளரும்; வளர்ந்த இம்முடியானது, 2 வருடங்கள் மற்றும் 3 மாதங்கள் நிலைபெறும்; பின்னர் உதிரத் தொடங்கும்.
முடியின் அடர்த்தியானது, தலையில் உள்ள முடி பாலிசெல்களைப் பொறுத்தே அமையும். அச்செல்கள் அடர்த்தியாக இருந்தால், அடர்த்தியான முடியும், செல்கள் அடர்த்தி குறைவாக இருந்தால், அடர்த்தியார் முடியும் வளரும். குழந்தைகளின் முடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது உணவுப் பொருட்கள். எவ்வகை உணவுகளை உட்கொள்ளச் செய்தால், குழந்தைகள் அடர்த்தியான,ஆரோக்கியமான கூந்தல் பெறுவர் என இப்பதிப்பில் காணலாம்…
1. மீன்
பொதுவாக மீன்கள் என்றாலே வளர்ச்சிக்கு உதவும் உணவுப் பொருளாகும். மீன்களில் ஒமேகா 3 அமிலங்கள் இருப்பதால், அவை கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றன. வளர்ந்த மீன்களில் சிறு நச்சுத்தன்மை காணப்படலாம்; ஆதலால் அவற்றை தவிர்த்து சிறு மீன்களை குழந்தைகளுக்கு உண்ணக் கொடுப்பது நல்லது. மீன்களை சமைக்கும் போது சிறிது ஆலிவ் எண்ணெய் சேர்ப்பது நல்லது, ஆலிவ் எண்ணெயில், ஒமேகா 9 அமிலங்கள் உள்ளன. அவை உடலுக்கு பெரும் நன்மை அளிக்கும்.
2. துத்தநாகம் நிறைந்த உணவுகள்..
குழந்தைகளுக்கு துத்தநாகம் நிறைந்த உணவுகளை அளிப்பதால், அது கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்தும். துத்தநாகம் நிறைந்த உணவுகள்: கோழி இறைச்சி, சூரியகாந்தி விதைகள், ஓட்ஸ் உணவு, கோதுமை.
3. இறைச்சி மற்றும் கீரைகள்..
இரும்புச் சத்து கூந்தல் வளர்ச்சிக்கு மிக அவசியம். ஆதலால், இரும்புச் சத்து நிறைந்த உணவுகளான இறைச்சி வகைகள் மற்றும் கீரை வகைகளை குழந்தைகளுக்கு அடிக்கடி அளிப்பது நல்லது.
4. முட்டை..
முட்டையில் அதிக புரதங்கள் உள்ளன. குழந்தைகளுக்கு தினம் ஒரு முட்டையாவது தர வேண்டும். முட்டையில் உள்ள சத்துக்கள் குழந்தையின் முடி வளர்ச்சியோடு, அவர்களுக்கு அதிக சக்தியையும் ஆற்றலையும் அளித்து, அவர்களை அழகு பெறச் செய்கிறது.
5. முழுதானிய உணவுகள்..
குழந்தைகளுக்கு முழுதானிய உணவுகளை தினம் உணவில் சேர்ப்பது நல்லது. கேழ்வரகு, கோதுமை, கம்பு, சோளம் போன்ற உணவுகளை குழந்தைகளின் உணவில் சேர்ப்பதால், அவர்களின் கூந்தலும், உடலும் பலம் பெரும்..