karuvuruthalil-enna-danakkirathu

திருமணம் என்னும் கட்டத்தை அடைந்த ஆணும் பெண்ணும் தங்களின் அடுத்த மிக அழகான, அதிக பொறுப்பான  கட்டத்திற்குள் காலெடுத்து வைப்பர். அவர்கள் இருவரும் மனதால், இணைந்த திருமணம் அவர்களை உடலாலும் இணைத்து, அவர்களின் உயிரால், அவர்களுக்குள் ஒரு புத்துயிரை உருவாக்க எத்தனிக்கும். அப்படிப்பட்ட ஒரு புத்துயிர் உருவாகும் நிகழ்வை நாம் கருவுறுதல் என்கிறோம். அக்கருவுறுதலில், என்ன தான் நடக்கிறது? எப்படி இரு உயிர் இணைந்து, ஓர் புத்துயிர் உருவாகிறது என்பது குறித்து, இப்பதிப்பில் படித்து அறியலாம்..! 

பெண்களின் மாதவிடாய் முடிந்த 14 அல்லது 15 நாளில், சினைப்பைகளிலிருந்து சினைமுட்டை (Ovum) வெளிபடும். இது ஒரு நாள் தான் உயிரோடு இருக்கும். அதற்குள் உடலுறவு நிகழ்ந்தால் கர்ப்பம் உண்டாகும். உடலுறவிற்கு பின் கோடிக்கணக்கான ஆணின் விந்து அணுக்கள் பெண்ணுறுப்பில் விழும். இவை ஆவேசத்துடன் முன்நோக்கி நகர்ந்து கர்பப்பையை நோக்கி நீந்தி ஒடும். இது ஒரு செ.மீ. கடக்க கிட்டத்தட்ட 3.2 நிமிடங்கள் (8 நிமிடங்களில் 1 அங்குலம்) ஆகும். கடக்க வேண்டிய தூரம் (பெண்ணுறுப்பிலிருந்து கர்பப்பையின் தூரம்) 15 லிருந்து 25 செ.மீ. இருக்கும். இவை கர்பப்பையை அடைய நீந்துவதற்கு உதவுவது வழவழப்பான விந்து திரவம். இலக்கை அடையும் முன்பே லட்சக்கணக்கான விந்தணுக்கள் சோர்வடைந்து விழுந்து விடும். வலிமையும், நகரும் துடிப்பும் உடைய விந்தணுக்கள் தான் முட்டையை அடையும். இந்த மிகச் சிறிய முட்டையை உயிரணுக்கள் முட்டி, முட்டி மோதும். இவற்றில் சிறந்த ஒரே ஒரு உயிரணு தான் முட்டையின் வெளிச் சவ்வை துளைத்து உள்ளே நுழையும். நுழைந்த உடனே, வேறு அணுக்கள் உள்ளே புகாதபடி சினை முட்டையில் சவ்வுப் பகுதி கதவு போல் மூடிக் கொண்டு விடும்! ஒரே ஒரு விந்தணுக்குத் தான் அனுமதி!

ஆணின் விந்துவும், பெண்ணின் முட்டையும் சேர்ந்தால் கரு உண்டாகும். இந்த சேர்க்கை நிகழாவிட்டால், கருத்தரிப்பு ஏற்படாது.

ஆண்களுக்கான காரணங்கள்

ஆண்களுக்கு ஹார்மோன் குறைபாடு, உடல் பருமன், நீண்ட கால புகைப்பழக்கம், மதுப்பழக்கம் மற்றும் ஆண்மைக் குறைவு பிரச்னைகள், உயிரணுக்கள் குறைந்தோ அல்லது இல்லாமலோ இருப்பது, அவற்றின் அசையும் திறன் குறைந்திருப்பது, உருவ அமைப்பு குறைபாடு, சர்க்கரை வியாதி மற்றும் மரபுரீதியான நோய்களால் ஏற்படும் குறைபாடுகள், உளவியல் காரணங்கள், உறுப்பில் குறைபாடு மற்றும் நோய்த் தொற்று போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்னை உண்டாகும். மேலும் கீழகண்டவற்றில் ஆண்கள் கவனமாக இருக்கவேண்டும்.

1. மன அழுத்தம்

2. உடல் பருமன்

3. அளவுக்கு அதிகமாக குடிப்பது

4. நீரிழிவு

5. இறுக்கமாக ஜீன்ஸ் அணிவது

6. உடலை பராமரிக்க ஸ்டெராய்டுகள் எடுத்துக் கொள்வது

7. அதிகமாக வண்டி ஓட்டுவது

8. புகைப்பிடிப்பது

9. ஜங்க் உணவுகளை சாப்பிடுவது

10. போதிய தூக்கம் இல்லாதது

11. இறுக்கமாக உள்ளாடை அணிவது

12. அலைபேசியை பைக்குள் வைப்பது

13. நோய்த்தொற்றுகள் இருப்பது

14. ஹார்மோன் ஏற்றத்தாழ்வு

15. லேப்டாப்பை மடியில் வைத்து வேலை செய்வது

பெண்களுக்கான காரணங்கள்

1. பெண்களுக்கு கருக்குழாய் அடைப்பு, 

2. கருப்பை வளர்ச்சியின்மை, 

3. கருப்பைக் கட்டிகள், 

4. முட்டை வெளியேறுவதில் பிரச்னை, 

5. சினைப்பை, 

6. கருப்பையில் என்டோமேட்ரியோசிஸ் பிரச்னை, 

7. ஹார்மோன் குறைபாட்டால் கருமுட்டை உற்பத்தி பாதிப்பு, 

8. கருச்சிதைவு மற்றும் கருக்கலைப்பினால் உண்டாகும் நோய்கள், 

9. உடல் பருமன், 

10. சர்க்கரை, 

11. ரத்த கொதிப்பு, 

12. தைராய்டு பிரச்னை போன்ற காரணங்களால் குழந்தைப் பேறு தடைபடலாம்.

பதிப்பு பயனுள்ளதாய் இருந்தது-என்று கருதினால், மற்றோர் அறிய, மற்றோருக்கு பயன்பட பகிரவும்..

Leave a Reply

%d bloggers like this: