வயதான தோற்றத்தை தடுக்கும் கிரீம்கள் பயனுள்ளதா?

வயதான தோற்றத்தை தடுக்கும் கிரீம்கள் பல இப்போது கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை உபயோகித்தால் உங்கள் வயது குறைந்தது போல இருக்கும் என்றெல்லாம் விளம்பரம் செய்கிறார்கள். இதை நம்மில் சிலரும் வாங்கி பயன்படுத்த துவங்கி விடுகிறோம். ஆனால் இவை உண்மையிலேயே பயன் தருகிறதா? எப்படி அவை வயதான தோற்றத்தை மறைகின்றன என்கிற சந்தேகங்கள் உங்களுக்கு தோன்றலாம். உங்கள் சந்தேகங்களுக்கான மருத்துவரின் பதிலை இங்கு பார்க்கலாம். 

வயதான தோற்றம் எப்படி தோன்றுகிறது? முதுமை என்பது நம் உடலில் நடக்கும் மெதுமெதுவான மற்றும் மிக நுண்ணிய மாற்றங்கள். உங்களுக்கு 30 வயது துவங்கும் போது தோலிற்கு அடியிலுள்ள கொழுப்புகள் மெதுவாய் கரைய ஆரம்பிக்கும்.

இதனால் முகத்திலுள்ள சருமம் தளர்ந்து தொங்க ஆரம்பித்து மிருதுவாகிவிடும். மெல்லிய கோடுகள் போன்று சுருக்கங்கள் நெற்றி மற்றும் கன்னங்களில் விழ ஆரம்பிக்கும். கண்களுக்கு அடியில் சதைப்பை மற்றும் புருவம் தொங்குதல் போன்ற மாற்றங்கள் ஏற்படும்.

பின் முகத்தில் உள்ள குருத்தெலும்புகள் தேய்மானம் அடைந்து, மூக்கு மற்றும் தாடையின் வடிவம் மாற ஆரம்பிக்கும். இப்படிதான் வயதான தோற்றம் ஏற்படுகிறது.இது நாம் சாப்பிடும் உணவு, சரியான தூக்கம் மகிழ்ச்சியான மன நிலை ஆகியவற்றை பொறுத்து இது ஒருவருக்கொருவர் மாறுபடும்.

முதுமை என்பது உலகில் உள்ள அனைவர்க்கும் மற்றும் அனைத்துக்கும் சமம் என்றாலும், இதில் கண்டங்களுக்கு தகுந்தர்போல் மாற்றமடைகிறது. முதுமை அடைவதில் ஆசிய மக்களுக்கும், ஐரோப்பிய மக்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. ஆசிய மக்களுக்கு 20 வயதில் முகப்பரு, கரும்புள்ளி போன்ற சரும பிரச்சனைகளும், 40 வயதில் முகத்தில் சுருக்கங்களும் ஏற்படும். ஆனால், இதற்கு மாறாக ஐரோப்பிய மக்களுக்கு இளம் வயதிலேயே சுருக்கங்கள் ஏற்பட்டுவிடுகின்றன.

வயதான தோற்றத்தை தவிர்க்கும் க்ரீம்களில், ரெட்டினால், பெப்டைட், அமினோ அமிலங்கள், விட்டமின்கள், ஸ்டெம் செல் மற்றும் நிறைய மூலிகை சாறு போன்றவற்றை கலந்து தயாரிக்கிறார்கள். இவை தோலின் மேல் பகுதியில் செயல்படுமே தவிர, தோலிற்கு வயதான தோற்றத்தை ஏற்படுத்த கூடிய உட்புறத்தில் இருக்கும் கொழுப்பு செல்களில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தாது.

இவை மேல் புறத்தில் தடவும் போது அது சுருக்கங்களை மறைப்பது போலத்தான் செயல்படுகிறது. ஆனால் உண்மையில் வயதான தோற்றத்தை மறைய செய்யாது. நீங்கள் வயதான தோற்றத்தை தவிர்க்கும் கிரீம்களை பயன்படுத்துவதை நிறுத்தினால் உங்கள் முகத்தில் மாற்றங்கள் தெரிய துவங்கும்.

ஆகவே விளம்பரங்களிலும், கடைகளிலும் சொல்வது போல் முதுமையை சரி செய்ய கூடியதாய் வருபவை எல்லாம் மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களே. இளமையை உள்ளிருந்து இயற்கை தரும் போஷாக்கினால் நீட்டிக்கச் செய்யலாம். அது மரபு சார்ந்தும் இருக்கலாம்.இருப்பினும் வயதான தோற்றத்தை தவிர்க்கும் க்ரீம்கள் ஓரளவிற்கு பயன் தருவதால் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றை தகுந்த தோல் நோய் நிபுணரிடம் ஆலோசித்து, தரம் வாய்ந்தவற்றையே உபயோகிக்க வேண்டும். இல்லையெனில் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.

Leave a Reply

%d bloggers like this: