குழந்தை நாள் பராமரிப்பு மையம்(Best Day Care): தேர்ந்தெடுக்க சில குறிப்புகள்..!

பிரசவம் முடிந்து, குழந்தை பிறந்த பின், நீங்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல முடிவெடுத்து விட்டீரா? நல்ல விஷயம்.. குழந்தையை யார் பார்த்துக் கொள்ள போவது? உங்கள் அன்னையா/ மாமியாரா/பணிப்பெண்ணா?? யாரை நம்பி விட்டுச் செல்வீர்? யோசியுங்கள் பெண்களே! 

குழப்பமாக உள்ளதல்லவா? உங்கள் இந்த குழப்பத்தைத் தீர்க்கவே, இப்பதிப்பு. குழந்தையை நீங்கள், நாள் பராமரிப்பு மையத்தில் சேர்ப்பதால், நீங்கள் எந்த உறவுகளையும் கெஞ்சத் தேவையில்லை. யாருக்கும் நன்றிக்கடன் படத்தேவையில்லை..! வாருங்கள் சிறந்த குழந்தை நாள் பராமரிப்பு மையத்தைத் தேர்ந்தெடுக்க உதவும் குறிப்புகளைப் பற்றி காண்போம்..

1. யாருடன் உங்கள் குழந்தை நாள் முழுதும் நேரம் செலவிடப்போகிறது???

குழந்தை நாள் பராமரிப்பு மையத்தைத் தேர்ந்தெடுக்கையில், அதை நடத்துபவர் பற்றி முழு விவரங்களையும் அறிய வேண்டியது அவசியம். அவரின் படிப்பு, நடத்தை, குணநலம், பின்புலம் பற்றி முற்றிலுமாக அறிய வேண்டும்.

2. நாள் பராமரிப்பு பற்றிய செவிவழித் தகவல்கள்..

ஒரு குழந்தை நாள் பராமரிப்பு மையம் சிறந்ததாக இருந்தால், அதைப் பற்றிய தகவல்கள் எல்லோராலும் பேசப்படும். அனைவரையும் அத்தகவல்களே அம்மையத்திற்கு வரவழைக்கும். அதுமாதிரியான, நல்ல தகவல்களை கேள்வியுற்று, பார்த்து குழந்தையை சேர்க்க வேண்டும்.

3. பாதுகாப்பு..!

குழந்தை நாள் பராமரிப்பில், குழந்தைக்கான அனைத்து பாதுகாப்பு முறைகளும் உள்ளனவா என்று பரிசோதித்த பின்னரே குழந்தையை அனுப்ப வேண்டும். குழந்தைக்கு அடிபட்டால், முதலுதவி அளிக்கும் வசதி உள்ளதா? பராமரிப்பு மையத்திற்குள் வந்து செல்பவரை கண்காணிக்க cctv கேமரா உள்ளதா? போர் வெல் என்று சொல்லப்படும் ஆழ்துளைக் கிணறு மூடப்பட்டுள்ளதா என்பனவற்றை பரிசோதித்த பின்னரே குழந்தையை சேர்க்க வேண்டும்.

4. தூய்மை..

குழந்தைகளை நாம் பராமரிப்பு மையத்தில், சேர்க்கும் பொழுது முதலில் கவனிக்க வேண்டியது அதன், தூய்மையான சூழல். குழந்தைகள் பாடம் பயிலும் இடம், தூங்கும் இடம், உணவு உண்ணும் இடம், விளையாடும் பகுதி, கழிவறை என அனைத்தும் தூய்மையாக உள்ளதா என சோதித்து அறிந்த பின்பே குழந்தைகளை சேர்க்க வேண்டும்.

5. ஆரோக்கியமான, தூய உணவு..!

குழந்தைகளுக்கு முடிந்தவரை, நீங்களே சுகாதாரமான முறையில், ஆரோக்கியமான உணவை கொடுத்து அனுப்புங்கள். இல்லையேல், நாள் பராமரிப்பு மையத்தில் உணவு வழங்கப்படுகிறதா? வழங்கப்படும் உணவு சுகாதாரமாக மற்றும் ஆரோக்கியமாக உள்ளதா? என சோதித்து, குழந்தையை அனுமதிக்கவும்.

6. தனிக்கவனிப்பு..!

குழந்தைகள் நாள் பராமரிப்பு மையத்தில், பல குழந்தைகள் இருப்பர்; ஒவ்வொரு குழந்தையையும் தனித்தனியாக கவனிக்கும் அளவுக்கு, ஆட்கள் அல்லது அத்தகு வசதி அங்குள்ளதா என்பதை பரிசோதிக்கவும். குழந்தைகளுக்கு வளரும் பருவத்தில், சரியான வழியில் அடிப்படைக் கல்வி மற்றும் தனிக்கவனிப்பு அளித்து குழந்தைகளின் குணநலன்களை கவனித்து, மேம்படுத்த வேண்டும்.

7. புத்திசாலியாக்க..!

குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி அளிப்பதோடு, குழந்தைகளின் புத்தியை கூர்மையாக்கும் வண்ணம், நாள் பராமரிப்பு மையத்தில், சிறந்த கல்வி அளிக்கப்படுகிறதா என்று சோதிக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏட்டுக் கல்வியுடன், நடைமுறை வாழ்வின் தார்ப்பரியத்தையும், இன்றைய தொழில்நுட்பத்தின் ஆதாரத்தையும் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும் வண்ணம் நாள் பராமரிப்பு மையத்தின், கல்வி கற்றுக் கொடுக்கும் முறை அமைய வேண்டும்.

Leave a Reply

%d bloggers like this: