பெற்றோர்: தம்பதியரிலிருந்து பெற்றோரான பின்னான வாழ்க்கை..!

திருமணமாகிய பின், இனிய இல்லறத்தை கணவனும் மனைவியும் அனுபவித்து வாழ்கின்றனர். இல்லற வாழ்க்கை தொடங்கிய சில காலங்களில் குழந்தைக்காக ஏங்குகின்றனர்; அப்படி தங்களுக்கு என ஒரு குழந்தை உருவான பின், கருவில் இருக்கும் போது, பார்த்து பார்த்து வளர்க்கின்றனர். அக்கரு உருவாகி, கைகளில் கிடைத்தவுடன் பெரும் ஆனந்தத்தை அடைகின்றனர்; குழந்தை வளர்ப்பது பற்றி, அவர்களுக்கு ஓரளவு தெரிந்திருந்தாலும், இல்லையெனினும் உறவுகளும், நண்பர்களும், தொழில்நுட்பமும் பெற்றோர்களுக்கு குழந்தையை வளர்க்க உதவுகிறது. 

இப்படி மாய்ந்து மாய்ந்து குழந்தையை வளர்க்கையில், பெற்றோரான பின், ஒரு தம்பதியரின் வாழ்க்கை பெருமளவு மாறிவிடுகிறது. கணவனும் மனைவியும், தாய் தந்தையராகி தங்கள் குழந்தையை கவனிப்பதில் பெரும்பாலும் நேரத்தை செலவிடுகின்றனர். தம்பதியரின் வாழ்வில் குழந்தை வந்தபின், அவர்கள் பேசிக்கொள்ள, தனித்து அளவளாவ நேரம் கிடைப்பதில்லை; குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் கல்வி என நிதி நெருக்கடியும் ஏற்படுகிறது.

ஆகையால், தம்பதியர் பெற்றோரான பின், நிகழும் சில பெரும் மாற்றங்களை பற்றி இப்பதிப்பில் படித்து, மாற்றத்தை மகிழ்ச்சியாய் மாற்ற முயல்வோம்…

1. கணவருக்கான நேரம்..

குழந்தை பிறந்தவுடன் தாயின் முழுக்கவனிப்பும் குழந்தை மீது திரும்பிவிடும்; குழந்தையை கொஞ்சுவது, குளிப்பாட்டுவது, பாலூட்டுவது, அதனுடனேயே தூங்குவது என இளம் தாய்மார்கள் முழுநேரத்தையும் குழந்தைக்கு அளித்து, கணவரை மறந்து விடுகின்றனர். இதனால், பல கணவன்மார்கள் பொறாமை மற்றும் மதிக்கப்படாததாய் உணர்கின்றனர்.

ஆகையால், பெண்களே! உங்கள் கணவருக்கு என சில மணி நேரங்களை ஒதுக்குங்கள்; கணவரில்லாமல் நீங்கள், உங்கள் குழந்தையை பெற்றெடுக்கவில்லை என்ற உண்மையை உணர்ந்து, தாயாய் அன்றி, பெற்றோராய் சேர்ந்து குழந்தையை வளருங்கள்…

2. தூக்கத்திற்கும் உடலுறவிற்கு டாட்டா..!

குழந்தையை கவனிக்கையில், பெற்றோரால் சரியாய் தூங்க இயலாது; உங்களால், உடலுறவும் கொள்ள இயலாது; ஆனால், இவ்விரண்டும் உங்கள் இல்லற வாழ்க்கைக்கு அவசியமான விஷயங்கள். ஆதலால், குழந்தை உறங்கும் போது, நீங்களும் உறங்கி ஓய்வெடுங்கள். சில சமயங்களில், குழந்தையை உங்கள் தாயார் அல்லது கணவரின் தாயாரிடம் அளித்து, கவனிக்க சொல்லிவிட்டு, கணவருடன் நேரம் செலவிடுங்கள்…

3. வாக்குவாதம்..!

குழந்தையை கவனிப்பதிலும், வளர்ப்பதிலும் தாய் மற்றும் தந்தையின் செயல்களும் எண்ணங்களும் சில சமயம் மாறுபடும்; அதை அமைதியாய் பேசி தீர்த்துவிட்டால், பிரச்சனை உருவாகாது. ஆனால், அதைவிடுத்து, உங்களுக்கு ஏற்படும் எரிச்சல், கோபம் இவற்றை உங்கள் கணவரிடம் காண்பிப்பது தவறு; இது சாதாரண சண்டையாய் தொடங்கி, வாக்குவாதமாய் வளர்ந்து, பின் வழக்காய் உங்களை நீதிமன்றத்தில் நிறுத்திவிடும்.

ஆகையால், என்ன கோபம், சண்டை என்றாலும் அதை பேசி தீர்த்துவிடுங்கள்; வாக்குவாதத்திற்கு இடம் கொடாதீர்கள்; குழந்தை வளர்ப்பிலும், கவனிப்பிலும் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், கணவரின் உதவியை நாடுங்கள்; நிச்சயம் அவர் உதவுவார், ஏனெனில் அது அவரது குழந்தை; அவரது வாரிசு; நீங்கள் அவரின் மனைவி. உங்களுக்கு உதவாமல், வேறு யாருக்கு செய்யப் போகிறார்.

இருவரும் தனித்திராது, ஓரணியாய் நின்று, குழந்தையை வளர்த்து, ஆளாக்குங்கள்..! வாழ்க வளமுடன்..! பதிப்பு பிடித்தால், பகிருங்கள்..!!

Leave a Reply

%d bloggers like this: