மாமியாருடன் விவாதங்கள் ஏற்படுவதைத் தடுக்க 7 வழிகள்…!

திருமணம் முடிந்து, இல்லறத்தை நல்லறமாக நடத்த மணமகள் மாணாளனின் வீட்டில் அடி எடுத்து வைக்கிறாள். ஆனால், கணவர் வீட்டில் உள்ளோர், முக்கியமாக உங்கள் மாமியார், முழு மனதுடன் உங்களை ஏற்றுக் கொள்ள சிறிது காலம் ஆகலாம். அக்கால கட்டத்தில், உங்களுக்கும் உங்கள் மாமியாருக்கும் தேவையில்லாத சண்டை மற்றும் வாக்குவாதங்கள் ஏற்படுவதைத் தடுக்க சில வழிகள் உள்ளன. அப்படிப்பட்ட அந்த வழிகளை பற்றி இந்த பதிப்பில், படித்து அறியலாமா மருமகள்களே..! 

1. சிரிப்பே மருந்து..!

உங்கள் மாமியார், உங்களைக் குறித்து எத்தகைய குறைகளைக் கூறினாலும், நீங்கள் பதில் பேசாது, சிரித்துவிட்டு, அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள். நீங்கள் எவ்வித கஷ்டமான சூழ்நிலையை எதிர்கொண்டாலும், அவற்றை சிரிப்பாலேயே சமாளிக்கும் வித்தையை அறிந்து கொள்ளுங்கள். இதுவே உங்கள் மனதிற்கும், உடல் நலத்திற்கும் நல்லது.

2. அன்பு..!

உங்கள் மாமியார் உங்களை எப்படி நடத்தினாலும், அவரிடம் நீங்கள் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள். உங்கள் அன்பு, விரைவில் அவரை நல்ல விதமாக மாற்றும். அன்பினை மிஞ்சும் ஆயுதமும் உண்டோ??

3. நாவடக்கம்..!

எத்தகைய சூழ்நிலை ஏற்படினும், உங்கள் வாயிலிருந்து தவறான, தேவையில்லாத வார்த்தைகள் வெளிவருவதை தவிருங்கள். வள்ளுவர் வாய்மொழியான, “யாகாவாராயினும் நாகாக்க” என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4. தொடர்பு..!

உங்களுக்கும் உங்கள் மாமியாருக்கும் இடையில் மூன்றாம் ஆள் நுழையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். என்ன பிரச்சனை உங்களுக்குள் நிகழ்ந்தாலும், மாமியாருடன் எப்பொழுதும் சுமூகமான நிலையையே மேற்கொள்ளுங்கள். அவரின் தொடர்பு அறுந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

5. எல்லைகள்..!

மாமியார் உங்களை எந்த இடத்தில் வைத்திருக்கிறார் என்பதை கிரகித்துக் கொள்ளுங்கள். உங்கள் வரைமுறை மற்றும் எல்லைகள் தெரிந்து நடந்து கொண்டால், தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

6. கவனம்..

நீங்கள் செய்யும் செயல்களை, எவ்வித குறைகளும் இல்லாமல், கவனத்துடன் சரியாக செய்ய முயலுங்கள். மேலும் உங்கள் மாமியார் மற்றும் வீட்டில் உள்ளோரை கவனித்துக் கொள்வதில் எந்த குறைகளும் நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்..

7. மனதைரியம்..

உங்கள் புகுந்தகத்தில் எந்த பிரச்சனை நேர்ந்தாலும், மனம் தளராமல் அவற்றை மனதைரியத்துடன் கையாளுங்கள். எதற்கு எடுத்தாலும் அழுது கொண்டு அம்மா வீட்டிற்கு செல்வதை தவிருங்கள். மனதைரியத்துடன் மணவாழ்க்கையை மேற்கொள்ளுங்கள்..!

Leave a Reply

%d bloggers like this: