பெற்றோர்களே! உங்கள் குழந்தைகள் உணவினை உண்ணாமல் அடம்பிடித்தால், அவர்களை உண்ண வைப்பது என்பது பெரும் பாடாக விளங்குகிறதா? உங்கள் குழந்தைகள் உணவினை தவிர்ப்பதால் அவர்களின் உடல் ஆரோக்கியம் குறித்த கவலையா? கவலை வேண்டாம்..! உங்கள் குழந்தைகளின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை சரியாக வழங்க மற்றும் அவர்கள் உட்கொள்ள என எளிய வழிகளை உங்களுக்குத் தருவதே இப்பதிப்பின் முக்கிய நோக்கம். படித்து பயனடையுங்கள்..!
உணவு உண்ணாமல் அடம்பிடிக்கும் குழந்தைகளுக்குச் சிலர் சாறு கொடுப்பார்கள். ஆனால், நேரம் காலம் தெரியாமல் எந்த சாறினை எப்போது கொடுக்க வேண்டும் என்பது புரியாமல் இருப்பார்கள். நெஞ்சுச்சளி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு, சாறு கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்ற சில வரைமுறைகள் உள்ளன. வளர்ச்சி குன்றிய குழந்தைக்கு ஆப்பிள் சாறு தருவது, மலச்சிக்கல் உள்ள குழந்தைக்குத் திராட்சை, வாழைப்பழம் சாறு தருவது என யாருக்கு எந்த சாறு தருவது என அன்னையர் அறிய வேண்டும்.
குழந்தைகளுக்கு 10-வது மாதத்திலிருந்து பழச்சாறுகள் கொடுக்கலாம். காலை நேரங்களில் ஒரேமாதிரியான பழச்சாறுகள் கொடுப்பதைத் தவிர்க்கலாம். மேலும், சீசன் பழங்களான வாழை, அன்னாசி, முலாம், தர்பூசணி, கிவி போன்றவற்றை மாறிமாறிக் கொடுக்கலாம். இரவு நேரங்களில் சிட்ரிக் ஆசிட் நிறைந்த பழச்சாறுகளைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பழச்சாறு அருந்துவதற்கான சிறந்த நேரம், காலை 11 மணி மற்றும் மாலை 3 மணி. உணவு உண்டபின் பழச்சாறுகளை அருந்தக்கூடாது. ஆனால், நெஞ்சுச் சளி, மூச்சுத்திணறல் உள்ள குழந்தைகள் குளிர்ச்சியாகச் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். மேலும், இருமல் பாதிப்பு இருந்தாலோ குளிர்காலத்திலோ பழச்சாறுகளைக் குளிர்ச்சியாகக் கொடுக்கக்கூடாது. சளித் தொந்தரவு வரும் குழந்தைகளுக்கு, நன்கு காய்ச்சி ஆறவைத்த குடிநீரில் சாறு கலந்து தருவது நல்லது.
உணவு வேண்டாம் என அடம்பிடிக்கும் குழந்தைகளுக்குப் பழச்சாற்றை உணவாகக் கொடுக்கலாம். அப்படிக் கொடுக்கும் எந்த வகைப் பழச்சாற்றிலும் பால் சேர்த்துக் கொடுக்கக் கூடாது. ஸ்மூத்திஸ்களுடன் பால், சர்க்கரை சேர்க்காமல் தயாரிப்பது நல்லது. சில பழங்களை ஒதுக்கும் குழந்தைகளுக்கு, அனைத்து பழங்களையும் கலந்த சாறாகக் கொடுக்கலாம். அதாவது, 3 – 4 வகைப் பழங்கள் சேர்த்து, அரைத்து சாறாகத் தயாரித்துக் கொடுக்கலாம்.
இப்படிக் குடிக்கக் கொடுப்பதால் உடலுக்குத் தேவையான அனைத்துவகைச் சத்துகளும் கிடைக்கும். சில வகைப் பழங்களைத் தவிர்த்து மற்ற பழங்களின் சாறினை வடிகட்டாமல் குடிப்பது சிறந்தது. அதுபோல், தோல் நீக்க வேண்டியவற்றைத் தவிர, மற்ற பழங்களைத் தோலுடன் சேர்த்து அரைத்துக் கொடுப்பது நல்லது.
எப்போதும் ஒரேவிதமான ஊட்டச்சத்தைக் கொடுக்கக்கூடாது. அதாவது, குழந்தைக்கு ஆப்பிள் சாறு பிடிக்கும் என்றால், அதையே தொடர்ந்து கொடுப்பதும் தவறு. இதனால், உடலுக்குத் தேவையான மற்ற ஊட்டச்சத்துகளின் குறைபாடுகள் ஏற்படலாம். வெறும் பழச்சாறுகளை மட்டுமே உணவாக உட்கொள்வதால், உணவுப் பழக்கமும் வாழ்க்கை முறையும் மாறுபடும். ஆகவே, அனைத்துவிதமான சத்துகளும் கிடைக்கத் திட உணவு, திரவ உணவு எனச் சமமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும், பழங்கள், காய்கறிகள், கீரைகள், பருப்பு – பயறு வகைகள், தானியங்கள் எனக் கலவையான உணவைக் கொடுப்பது நல்லது. குழந்தைகளுக்கு அனைத்து வகையான உணவுகளையும் அளவாகக் கொடுக்கலாம். துரித உணவுகள், கார்பனேட்டட் பானங்கள் மற்றும் ஃபாஸ்ட்ஃபுட் போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
அதிக நிறமுள்ள உணவுப் பண்டங்களைத் தவிர்க்கலாம்; உதாரணத்துக்கு, இனிப்புகள். மாறாக, அடர் நிற சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிறக் காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்,