குழந்தைகளை கவரும் பூந்தி லட்டு – தீபாவளி ஸ்பெஷல்

என்னதான் உணவில் மாற்றங்கள் ஏற்பட்டு பல வகைகளில் மாறினாலும், நாம் பண்டைய திண்பண்டகளின் மீது ஈர்ப்பு நமக்கு இன்னமும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. பெரும்பாலானோர் விரும்பும் பண்டைய இனிப்புகளில் ஒன்று தான் பூந்தி லட்டு. லட்டு பிரியர்களுக்கு லட்டு என்றாலே பிடிக்கும், அதிலும் பூந்தி லட்டு என்றால் கொள்ளை பிரியமாய் இருப்பார்கள். அந்த கால பெரியவர்கள் முதல் இன்றைய கால குழந்தைகள் வரை அனைவர்க்கும் பிடித்தமான ஓன்று தான் லட்டு. பெரும்பாலும் இவற்றை நாம் கடைகளில் வாங்கி தான் சுவைப்போம். நம் குழந்தைகளிடம் எங்க பாட்டி வீட்டிலேயே சுவையாக தயாரிப்பார் என்றெல்லாம் கூறுவோம். இதை நாமும் இப்போது வீட்டில் தயாரிப்பதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

1 கடலை மாவு – 1 கப்

2 சர்க்கரை – 1 கப்

3 தண்ணீர் – ¾ கப்

4 ஏலக்காய் பொடி – அரை தேக்கரண்டி

5 முந்திரி – சிறிதளவு

6 நெய் – 1 தேக்கரண்டி

7 எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

1 கடலை மாவுடன் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தை விட கொஞ்சம் கெட்டியாக கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும். எண்ணெய் வடிக்க பயன்படும் கரண்டியில் (சாரணி) இந்த கலவையை ஊற்றி தேய்த்தால் துளிகள் கீழே விழ வேண்டும். இல்லை என்றால் மீண்டும் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.

2 பாத்திரத்தை அடுப்பில் வைத்து சர்க்கரை மற்றும் தண்ணீரை சேர்த்து, சர்க்கரை நன்கு கரைந்து நூல் பதத்திற்கு வரும் போது இறக்கி ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறி ஆற விடவும்.

3 பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும், எண்ணெய் வடிக்க பயன்படும் கரண்டியை பாத்திரத்தின் அருகில் வைத்து மாவை ஊற்றவும். ஒரே இடத்தில் ஊற்றாமல் கரண்டியின் இடத்தை மாற்றி பாத்திரத்தை சுற்றி மாவை ஊற்றுங்கள். பூந்தி வெந்து ஒட்டிக் கொள்ளும் முன் அவற்றை பிரித்து வேக விடவும்.

4 வெந்த உடன் சர்க்கரை பாகில் போட்டு ஊற விடவும். தொடர்ந்து மாவு முழுவதையும் ஊற்றி வேக வைத்து, அனைத்தையும் சர்க்கரை பாகில் போடுங்கள்.

5 முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து அதனுடன் சேர்த்து கிளறி அரைமணி நேரம் ஊற விடுங்கள்.

6 பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கைகளை நனைத்து வேண்டிய அளவில் உருண்டைகளாக உருட்டுங்கள்.

7 அனைவருக்கும் பிரியமான சுவையான பூந்தி லட்டு தயார்.

Leave a Reply

%d bloggers like this: