வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு

கர்ப்பம் என்பது ஒரு தவம் போன்றது. தவத்தின் பலனாய் பத்தே மாதத்தில் குழந்தை கையில் கிடைத்து விடும். கர்ப்பகாலம் என்பது சில மாற்றங்களை ஏற்படுத்தினாலும் பெண்களால் மகிழ்ச்சியுடனே ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இப்போதைய கர்ப்பகாலத்தில் அனைத்து வேலைகளையும் சாதாரணமாக செய்கிறார்கள். அவர்களது அலுவலக வேலைகளை கூட தொடர்ந்து செய்கிறார்கள். இங்கு வேலைக்கு செல்லும் கர்பிணிகளுக்கான சில குறிப்புகளை பார்க்கலாம்.

தற்போது அலுவலகம் செல்லும் பெண்களுக்கு பயணத்தால் ஏற்படும் களைப்பு, வேலையை முடிக்க வேண்டுமே என்கிற பரபரப்பு போன்றவற்றால் ஏற்படும் மனஅழுத்தம் போன்ற பல காரணங்கள் உடல்நலனை பாதிக்கின்றன. இதனால், தாயை விட வயிற்றில் இருக்கும் சிசுவே அதிக பாதிப்பிற்குள்ளாகிறது. வேலைக்கு செல்லும் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் என்பது சவாலான ஒன்றாகவே இருக்கிறது. அதிக வேலைப்பளுவினால் ஏற்படும் மனஅழுத்ததால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு தேவையான அளவு ஆக்ஸிஜன், இரத்தம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் போன்றவை கிடைக்காமல் போகலாம்.

1 உணவு

கர்ப்பக் காலத்தில் செரிமான மண்டலம் மெதுவாகத்தான் இயங்கும். குழந்தையின் வளர்ச்சியால் வயிறும் பெரிதாகிக்கொண்டே இருப்பதால், ஒரே நேரத்தில் நன்றாகச் சாப்பிட முடியாது. ஆனால், இந்தத் தருணத்தில்தான் உடலுக்கு அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் தேவைப்படும்.

எனவே, மூன்று வேளை என்பதை, சிறிது சிறிதாகப் பிரித்து ஆறு வேளைகளாகச் சாப்பிடுங்கள். சரியான நேரத்தில், போதிய இடைவெளியில் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இரவில் ஆவியில் வேகவைத்த அல்லது எளிதில் செரிக்க கூடிய உணவுகளைச் சாப்பிடுவது நல்லது. இது கர்ப்பிணிகளுக்கு மட்டும் என்றில்லாமல், குழந்தைகளுக்கும் சேர்த்து உண்ண வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

2 பழங்கள்

கர்ப்பகாலத்தில் உணவில் பழங்களை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. ஆப்பிள், கொய்யா, வாழைப் பழம், பேரிக்காய் போன்ற சத்துள்ள பழங்களை நறுக்காமல், அலுவலகம் செல்லும் போதோ அல்லது வெளியில் செல்லும் போதோ எடுத்துச்செல்ல வேண்டும். பழங்களை நறுக்கி வைப்பதால் காற்றுடன் வினைபுரிந்து அதன் சத்துக்கள் குறையும். பழங்களைக் கடித்துச் சாப்பிடுவது நல்லது. முடியாத பட்சத்தில் பழச்சாறு செய்து சாப்பிடலாம். உடல் வறட்சி நீங்குவதுடன் வயிறும் நிறையும்.

3 தண்ணீர்

கர்ப்பிணி பெண்கள் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.`எப்போதும் காய்ச்சி ஆறவைத்த நீரை எங்கு சென்றாலும் எடுத்துச்செல்ல வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என தினமும் 12 டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லது.

4 உலர்பழங்கள்

பழங்கள் உடலுக்கு போதுமான ஊட்டச்சத்துக்களை கொடுப்பதைப் போல் உலர்பழங்களும் ஆரோக்கியத்திற்கு சிறந்தவையே. உடலுக்கு ஆற்றல் தரக்கூடிய உலர் பழங்களைக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதிக வேலைச் சுமையின்போது, அவற்றை சாப்பிடலாம்.

5 சாப்பாட்டை தவிர்ப்பது

நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்தால், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைய ஆரம்பித்துவிடும். இதனால், சிசுவின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். எனவே, எப்போதும் கையில் பழங்கள், உணவு பொருட்கள் பிஸ்கட்டுகள் போன்றவற்றை வைத்து கொள்ள வேண்டும். பசிக்கும்போது சாப்பிட வேண்டியது அவசியம்.

6 நெஞ்செரிச்சல்

கர்ப்பிணி பெண்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படுவது சாதாரணமான ஒன்று தான். நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், வறுத்த, பொரித்த, அதிக காரம் மற்றும் எண்ணெய் உணவுகளைச் சாப்பிடக் கூடாது.

7 நடைப்பயிற்சி

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் காலில் இரத்தம் தங்குதல், வெரிகோசிஸ் வெய்ன், ரத்தம் கட்டிப்போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதை தவிர்க்க அலுவலகத்தைச் சுற்றி நடைப்பயிற்சி செய்யுங்கள். கடினமான உடற்பயிற்சிகள், அதிக எடைகொண்ட பொருள்களைத் தூக்குவது போன்றவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

அலுவலகம் முடிந்து வீடு வந்ததும், நல்ல வெளிச்சமான பகுதியில் காலாற சிறிது நேரம் நடக்கலாம். கடின வேலைகளைத் தவிர்த்து, முடிந்தவரை கர்ப்பக் காலத்தில் எடையையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம்.

Leave a Reply

%d bloggers like this: