பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு கற்பிக்க வேண்டியவை

பெண்களை கண்களாக மதிக்கும் இந்த நாட்டில் தான் அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகளும், பாலியல் சீண்டல்களும் அதிக அளவில் நடந்தேறுகிறது. பெண் என்றால் 4 வயது குழந்தை முதல் மூப்படைந்த, வயது முதிர்ந்த பெண்களும் இதில் பாதிக்கப்படுகிறார்கள். வயதிற்கு வராத குழந்தைகள் முதல் மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்கள் வரை அனைவருமே இதில் பாதிப்படைகிறார்கள். எங்கும் தலை விரித்தாடுகிறது பாலியல் கொடுமைகள். பெண்களை கடவுள் என போற்றும் அந்த இடத்தில் கூட பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அரங்கேறுகின்றன. ஆண் குழந்தைகளும் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்தாலும், பெண் குழந்தைகளே இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இங்கு பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு பெற்றோர் கற்பிக்க வேண்டியவற்றை பார்க்கலாம்.

1 தற்காப்பு பயிற்சி

பெண்களும் சாதிக்க முடியும் என சாதனையாளர் பட்டியலில் இடம் பிடிக்கின்றன. தற்போதைய பெற்றோரும் அதை எதிர்க்காமல், ஆதரிக்க துவங்கி இருக்கிறார்கள். அவர்களின் முன்னேற்றம், திறமை மற்றும் ஆர்வத்தை மனதில் கொண்டு பெற்றோர்களும் அனுமதிக்கிறார்கள். “அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு” என்கிற நிலை மாறி பெண்கல்வி கட்டாயத்தை உணர்ந்து பள்ளிகளுக்கு, பல பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புகிறார்கள். ஆனால், அந்த இடம் குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா, பயிற்சியாளர் மற்றும் பணியாற்றுபவர்கள் எப்படி பட்டவர்கள் என்பதை கவனிக்க தவறிவிடுகிறார்கள்.

முதலில் சில காலங்களுக்கு வீட்டில் யாராவது ஒருவர் குழந்தைகளை அழைத்து சென்று, பின்னர் அழைத்துவர வரவேண்டும். குழந்தையை எந்த பயிற்சி வகுப்புகளுக்கு வேண்டுமானாலும் அவர்கள் விருப்பத்துடன் அனுப்பலாம். ஆனால் கட்டாயம் அவர்களுக்கு தற்காப்பு பயிற்சியை கற்றுக் கொடுப்பது எல்லாவற்றிலும் விட முக்கியம். அப்போதுதான் குழந்தையிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றால், உடனே அவரை எதிர்த்து குழந்தைகளால் தப்பிக்க முடியும்.

2 பழகும் முறை

ஒவ்வொரு குழந்தையிடமும் தன் ஆண், பெண் நண்பர்களிடம், உறவினர்களிடம், ஆசிரியர்களிடம், பயிற்சியாளர்களிடம், சமூகத்தில் அன்றாடம் சந்திப்பவர்களிடம் எப்படி எந்த எல்லைக்குள் பழகுவது, நடந்துகொள்வது என்பது பற்றி கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டும். இது மற்றவர்களை பற்றிய புரிதலை அவர்களிடம் ஏற்படுத்தும். அவர்களை கண்டிக்காமல், பொறுமையுடன் எடுத்து கூற வேண்டும்.

3 பாலியல் கல்வி

பாலியல் கல்வியின் மீதிருக்கும் தவறான கண்ணோட்டமே, இந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணமாக அமைகிறது. பலரும் அதை தவறான முறையில் கற்று கொள்வதிலேயே, பெண்களும் குழந்தைகளும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் பெற்றோர்கள்தான் தங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் வயது மற்றும் புரிந்துகொள்ளும் தன்மைக்கு ஏற்ப பாலியல் சார்ந்த விஷயங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு வயதிலும் நடைபெறும் ஆண், பெண் குழந்தைகளின் உடல் ரீதியான மாற்றங்கள், எண்ணங்கள், அப்போது எதிர்பாலினத்தவரிடம் தானும் அவர்கள் உன்னிடமும் பழகும் தன்மை ஆகியவற்றை விளக்கிக் கூற வேண்டும். அப்போதுதான் ஒரு குழந்தை எதிர்பாலினத்தவர் ஒருவர் தன்னிடம் என்னக் கண்ணோட்டத்தில் பழகுகிறார் என்பதை புரிந்து, ஆபத்து வந்தால் தற்காத்துக்கொள்ள முடியும்.

4 தொடுதல்

பெற்றோரை தவிர அல்லது பெற்றோர் முன்னிலையில் பழக்கப்பட்ட நபர் அன்பு காட்டும் விதமாக குழந்தை மீது கை வைக்கலாம். மாறாக எந்த சூழலிலும் ஒருவர் குழந்தையின் தலைமீது, கன்னம் மீது, உடல் மீது கைவைப்பதை அனுமதிக்க கூடாது என சொல்லி கொடுக்க வேண்டும். பெற்றோர் மற்றும் யாராக இருந்தாலும் குழந்தைகளுக்கு விருப்பமில்லாமல் தொட்டால், கையை தட்டிவிடு, தூரமாக விலக்கிவிடு, மீறி ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துகொள்கிறார் என்றால் உடனே சத்தம் போடு, உடனே சுதாரித்துக்கொண்டு தப்பித்து அருகில் இருப்பவர்களிடம் சொல் எனச் சொல்ல வேண்டும்.

5 அந்நியர்கள்

பெற்றோர் அல்லது உடன் பிறந்தவர்களை தவிர ஒருவர் தன்னிடம் அதிக உரிமை எடுத்துக்கொண்டு பழகுவது, உடலில் தொட்டுப் பேசுவது, அதிக உரிமைக்கொண்டு பரிசுப்பொருட்களை கொடுத்து நெருங்கிப் பழகுவது, ஒருவர் அதீத அக்கறையுடன் பேசுவது இதுப்போன்ற சம்பவங்கள் நடந்தால் ஆரம்பக்கட்டத்திலேயே தங்களிடம் தெரிவிக்கும்படி பெற்றோர்கள் குழந்தைகளிடம் சொல்ல வேண்டும். பின்னர் சம்பந்தப்பட்ட நபரைப் பற்றி பெற்றோர்கள் விசாரித்து முன்னெச்சரிக்கையுடன் செயல்படலாம்.

6 குழந்தைகளுடன் நேரம் செலவிடுதல்

தினமும் இரவு நேரத்தில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்கி அன்றைய நாளில் என்னவெல்லாம் நடந்தது, யார் எல்லாம் குழந்தையுடன் பழகினார்கள், சந்தோஷமான, அசாதாரண நிகழ்வுகள் எதாவது நடந்ததா என்பதை பொறுமையுடன் கேட்க வேண்டும். குழந்தைகளிடம் பெற்றோர் என்று கண்டிப்புடன் இருக்காமல், நண்பர்களை போல் பழகினால் மட்டுமே அவர்களது பிரச்சனைகளை அறிய முடியும்.

பிரச்சனை எதுவானாலும் குழந்தைகளை பெற்றோரிடம் தெரிவிக்க சொல்ல வேண்டும். குழந்தையின் மீது தவறில்லை என்றால், பயப்பட கூடாது என நம்பிக்கை கொடுக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் எந்த ஒரு விஷயத்தையும் ஆரம்பத்திலேயே பெற்றோர்களிடம் வந்து தெரிவிப்பார்கள். அதற்கு பெற்றோர்கள் பிள்ளைகள் தங்களிடம் எல்லா விஷயங்களையும் ஒளிவு மறைவின்றி பேசும் அளவுக்கு நடந்துகொள்ள வேண்டும். மாறாக எதற்கெடுத்தாலும் பிள்ளைகளிடம் கோபப்படுவது, பிள்ளைகள் தெரியாமல் செய்யும் சிறு தவறுகளை கூட பெரிது படுத்தி கண்டிப்பது தவறு.

7 நடவடிக்கை

பெரும்பலான குழந்தைகள் அவர்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகளை வெளியே சொல்ல அஞ்சுவார்கள். தினமும் குழந்தையின் நடவடிக்கை, செயல்பாடு, உடல்நிலை, உணர்வுகளை கண்காணிக்க வேண்டும். இயல்புக்கு மாறாக பெண் குழந்தைகள் நடந்துகொண்டால், அதற்கான காரணத்தை அறிந்து சரி செய்ய வேண்டும்.

குழந்தை பாலியல் பிரச்சனையில் சிக்கி இருந்தால், குழந்தையின் மனநிலையை மாற்றி அவர்களை அதிலிருந்து வெளியே கொண்டுவர வேண்டும். நடந்த சம்பவத்தை சொல்லி காட்டுவது, மீண்டும் வெளியுலக அனுபவமும், பயிற்சி எதுவுமே கிடைக்காமல் செய்வது, சக நண்பர்களிடம் பழக விடாமல் செய்வது குழந்தைகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

பெற்றோர்களின் கவனத்திற்கு

குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான பல குற்றச் சம்பவங்கள் நன்றாக தெரிந்த நபர்களால்தான் அதிகமாக நடைபெறுகின்றன. அதனால் கூடுதல் கவனத்துடன், குழந்தையிடம் பழகுபவர்களைப் பற்றி தெரிந்துகொள்வதுடன், அவர்களின் பின்புலங்களை தெரிந்துகொள்வது மிக நல்லது. அவ்வப்போது குழந்தைகள் பயிற்சிக்கு செல்லும் இடங்களுக்கு சென்று பயிற்சியாளர், சக நண்பர்கள், அங்கிருக்கும் சூழல்கள் ஆரோக்கியமானதாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வது நல்லது.

Leave a Reply

%d bloggers like this: