குழந்தைகளின் மனநிலையை பாதிக்கும் கார்ட்டூன்

நாம் குழந்தைகளாக இருக்கும் போது, அண்டை வீட்டு குழந்தைகளுடன் வெளியில் விளையாடுவோம். அதனால் அன்பு, பாசம், நட்பு, விட்டு கொடுத்தல் மற்றும் பரிவு போன்றவற்றை கற்றுக் கொண்டிருப்போம். இப்போதைய குழந்தைகள் அலைபேசியில் விளையாடுவது, தொலைக்காட்சியில் கார்ட்டூன் பார்ப்பது போன்றவற்றை மட்டுமே செய்கிறார்கள். இதனால் அவர்கள் மனதளவில் சில பாதிப்புகளை சந்திப்பார்கள்.

கார்ட்டூன், குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்ட நிலையில் குழந்தைகளை, உணவு சாப்பிட வைக்கவும், பெற்றோர் அவர்கள் வேலைகளில் தொந்தரவின்றி செய்யவும், குழந்தைகளை கார்ட்டூன் பார்க்க அனுமதிக்கிறார்கள். ஆனால் கார்ட்டூன் பார்ப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பை அவர்கள் அறிவதில்லை. இங்கு குழந்தைகளின் மனநிலையை பாதிக்கும் கார்ட்டூன் பற்றி பார்க்கலாம்.

கார்ட்டூன் பார்ப்பது குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியை பெரிதாக பாதிப்பதாகவும், கார்ட்டூன் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையாகும் போது, குழந்தையின் கற்பனை திறன் பெரிதும் பாதிக்கப்படும். குழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் மகிழ்ச்சி போன்றவற்றை உணர்வதில்லை. வெளியில் விளையாடுவது, அவர்களுக்கு இயற்கையை தெரிந்து கொள்ளவும், துடிப்போடு செயல்படவும் மற்றும் சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது. வெளியில் விளையாடும் போது சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் வைட்டமின் டி அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், எலும்பு வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகின்றன.

பெரும்பாலான கார்ட்டூன்கள் கதாப்பாத்திரங்கள், சரியான சொற்களை பயன்படுத்துவதில்லை. இதனால், தவறான மொழி உச்சரிப்பை குழந்தைகளை பின்பற்ற வைக்கிறது. குழந்தைகள் சாதாரணமாக பேசுவதை தவிர்த்து விட்டு, அவர்களுக்கு விருப்பமான கார்ட்டூன் கதாபாத்திரங்கள் போல் பேச முயற்சிக்கின்றன. இது, கார்ட்டூன்களால் குழந்தைகள் பாதிப்படையும் காரணிகளில் ஒன்று. கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள் செய்வதை எல்லாம் அவர்களும் செய்வார்கள். சில சாகசங்களை செய்வதாக ஆபத்திலும் சிக்கி கொள்வார்கள்.

கார்ட்டூன் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையான குழந்தைகள், திரைக்கு முன் அமர்ந்து சாப்பிடவே முற்படுவர். இதுவே, குழந்தைகளின் தவறான மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறைக்கு மூலக் காரணம். குழந்தைப் பருவத்தில் ஒருவர் பழகும் உணவு முறையே, இறுதி வரை நிலைத்திருக்கும். கார்ட்டூன்கள் முன், அதிக நேரம் செலவழிப்பது, குழந்தைகளுக்கு தனிமை மனப்பான்மைக்கும், அலட்சிய மனப்பான்மைக்கும் வித்திடும். இதனால், தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றி, அவர்களுக்கு அக்கறை இருப்பதில்லை. இது, அவர்களின் சமூக நடத்தையையும் பாதிக்கிறது.

அவர்கள் தனிமையை விரும்புவார்கள். பெரும்பாலான நேரத்தை தொலைக்காட்சி மற்றும் அலைபேசியுடனே செலவிடுவார்கள். அவர்களது நினைவாற்றல் குறைய துவங்கும். படிப்பிலும் கவனம் குறையும், ஒரு விதமான மந்த தன்மையோடு இருப்பார்கள். அவர்கள் கார்ட்டூன் பார்க்கும் நேரத்தை குறைக்க வேண்டும். அவர்களுடன் பெற்றோர் நேரம் செலவிடுதல் மற்றும் விளையாடுதல் போன்றவற்றை செய்வதன் மூலம் பெற்றோர் இவர்களை பாதுகாக்க முடியும்.

Leave a Reply

%d bloggers like this: