உள்ளாடை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

ஆடைகள் என்றாலே பெண்களுக்கு பிடித்தமான ஒன்று தான். அதிலும் வண்ண வண்ணமாக விதவிதமாக அழகான தோற்றத்தை வெளிப்படுத்தும் விதமாக அணியவே விரும்புவார்கள். பொதுவாக வெளிப்புறத் தோற்றத்தில் செலுத்தும் கவனத்தைப் பலரும், உள்ளாடைகள் வாங்குவதில் செலுத்துவதில்லை. உள்ளாடை எந்த அளவுக்கு தரமானதாகவும், கச்சிதமான அளவிலும் இருக்கிறதோ, அதைப் பொருத்துதான் நம் மேலாடையின் அழகும் வெளிப்படும். இங்கு உள்ளாடை வாங்கும் போது கவனிக்க வேண்டியவற்றை பற்றி பார்க்கலாம்.

1 சரியான அளவு

பொதுவாக பெண்கள் பிராவை வாங்கும்போது சரியான அளவைக் கேட்டு வாங்குவதில்லை. மார்பக அளவைவிட சிறிய அல்லது அதைவிட பெரிய அளவுகளை வாங்கிவிடுவார்கள். மார்பகங்களுக்கு சற்று கீழ்புறமாகவும் இடுப்புக்கு மேலும் உள்ள பகுதியில் தான் பிராவைப் பொருத்துகிறோம். பெரும்பாலும் இந்த இடுப்புக்கு மேல் உள்ள அளவைச் சொல்லி பிராவைக் கேட்டு வாங்கும் பெண்கள் தங்கள் மார்பகங்களின் அளவுக்கு தகுந்த கப் சைஸ்கள் கொண்ட பிராவை வாங்குவதில்லை. சிறிய மார்பகங்கள் கொண்ட பெண்கள் பெரிய அளவிலான கப் சைஸ்கள் அணிவதாலோ அல்லது பெரிய மார்பகங்கள் உள்ள பெண்கள் சிறிய அளவிலான கப் சைஸ் கொண்ட பிராவை அணிவதால் உடல்ரீதியான தொந்தரவுகள் ஏற்படும்.

2 நிறம்

உள்ளாடைகள் அணியும் போது நிறத்தில் கவனம் செலுத்துவது அவசியம். அதாவது, வெளிர் நிற ஆடைகளுக்கு வெளிர் நிறங்களிலும் அடர்நிறங்கள் கொண்ட ஆடைகளுக்கு அடர் நிறங்களிலும் தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது. பொதுவாக வெள்ளை, கருப்பு மற்றும் சந்தன நிற உள்ளாடைகள் சிறந்ததாக இருக்கும்.

3 ஆடைக்கேற்ற தேர்வு

அணிய போகும் ஆடையை பொறுத்து உள்ளாடை அணிவது சிறந்தது. புடவை, சுடிதார், வெஸ்டர்ன் ஆடைகள், டி-ஷர்ட் என ஆடை தேர்வுக்கு ஏற்ப பிரவையும் தேர்வு செய்வது நல்லது.

4 ஸ்போர்ட்ஸ் பிரா

விளையாடும் போது இந்த வகையான பிராக்களைப் பயன்படுத்தும்போது மிகவும் கச்சிதமாகவும், உறுத்தாமலும் இருக்கும். கவனம் திசை திரும்பாமல் ஆடை குறித்த கவலை இல்லாமல் தைரியமாக விளையாட இந்த வகை பிராக்கள் உதவுகின்றன. இவை பனியன் துணியால் உருவாக்கப்பட்டிருக்கும்.

5 பேடட் பிரா

ஒல்லியான பெண்களுக்கு எடுப்பான மார்பகங்களை கொடுப்பவை இந்த வகையான பிராக்கள். மார்பகம் சிறியதாய் உள்ளதே என, கவலை கொள்ளும் பெண்கள் தன்னம்பிக்கையுடன் இருக்கலாம். மார்பக வடிவில் கிடைக்கும் இவற்றையும் சரியான அளவில் வாங்குவது நல்லது.

6 டி- ஷர்ட் பிரா

மெல்லிய டாப்ஸ் மற்றும் டி- ஷர்ட்களைப் பயன்படுத்தும் பெண்கள் இந்த வகை பிராவைப் பயன்படுத்தலாம். இது சாதாரண பிராக்களைப் போல இல்லாமல் மிருதுவாக இருக்கும். பிராவின் கொக்கி மற்றும் ஸ்ட்ராப் போன்றவை வெளியே தெரியாது. டி- ஷர்ட் அணிந்த பிறகு பார்ப்பதற்கு வித்தியாசமான உணர்வைக் கொடுக்காது.

7 அண்டர் ஒயர் பிரா

பிரா கப்களுக்கு கீழ் மெல்லிய ஒயரைக் கொண்டிருந்தால் அது அண்டர் ஒயர் பிரா. தளர்ந்து போயிருக்கும் மார்பகங்களைத் தாங்கிப் பிடிக்க இவை பயன்படுகின்றன. எடை கூடுதலாக உள்ளவர்கள் இவற்றைப் பயன்படுத்தலாம்.

சரியான அளவிலான பிராக்களை அணியாவிட்டால் தோள்பட்டையில் தழும்புகள் ஏற்படுவதுடன் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். 

Leave a Reply

%d bloggers like this: