அழகான சருமம் பெற உதவும் பொருட்கள்..!

பெண்களின் வாழ்க்கையில் நிகழக்கூடிய மிக மூன்று முக்கியமான விஷயங்களில் ஒன்று தாய்மை. மிகவும் உன்னதமாக பார்க்கப்படுகிற இந்த விஷயத்த்தினால் அதாவது பெண்கள் தாய்மைப் பேறு அடைவதாலேயே ஒரு பெண் முழுமையடைகிறாள் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு பெண் குழந்தையை சுமக்கும் போது உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏராளமான மாற்றங்களை சந்திப்பார்கள்.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் சருமப் பிரச்சனைகள் தோன்றிடும். இதற்கு தீர்வு காணும் வகையில் எந்த கெமிக்கலும் சேர்க்காத இயற்கையான பொருட்களைக் கொண்டு கர்ப்பிணிப்பெண்களுக்கான சில அழகு குறிப்புகள்.

சந்தனம் 

சந்தனம் மிகவும் குளிர்ச்சியானது. இதனை சூடான நீரில் கலந்து கொள்ளலாம் அல்லது இரண்டு டீஸ்ப்பூன் எலுமிச்சை சாறுடன் சேர்த்து பயன்படுத்தலாம். இது சருமத்தில் தோன்றும் நிறமாற்றங்களை போக்கிடும். அதே சமயம் முகத்தை எப்போதும் புத்துணர்வாக வைத்திருக்க உதவிடும்.

தண்ணீர் 

நம்முடைய சருமம் வறண்டுவிடாமல் பாதுகாத்து வந்தாலே பல்வேறு தோல் நோய்களிலிருந்து தப்பிக்கலாம். சருமத்தை ஈரப்பத்துடன் வைத்திருக்க வேண்டுமானால் போதுமான அளவு தண்ணீர் சத்து அவசியம். அதனால் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள், தண்ணீரைத் தவிர இயற்கையான பழச்சாறுகள், சூப், இளநீர் போன்றவை குடிக்கலாம். செயற்கையான பானங்கள், கேஸ் நிறைந்த பானங்கள், அதிகமாக காபி, டீ போன்றவற்றை குடிப்பதை தவிர்த்திடுங்கள்.

உருளைக்கிழங்கு 

உருளைக்கிழங்கில் ஏராளமான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்திருக்கின்றன. இத்துடன் கூடுதலாக எந்த பொருளும் சேர்க்கத் தேவையில்லை. இதனை நீங்கள் இரண்டு விதமாக பயன்படுத்தலாம். ஒன்று உருளைக்கிழங்கை பெரிய துண்டாக அறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனைக் கொண்டு உங்கள் முகத்தை துடைத்தெடுக்கலாம். இதனால் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் எல்லாம் நீங்கிடும். மேலும் சருமத்துளைகளும் புத்தாக்கம் பெறுவதால் பொலிவாக தெரியும். இதே போல உருளைக்கிழங்கை தோல்சீவி அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதிலிருந்து சாறெடுத்து அதனையும் முகத்தில் அப்ளை செய்யலாம்.

தயிர் 

சருமத்தில் கரும்புள்ளிகள் தோன்றினால் அதற்கு தயிர் சிறந்த மருந்தாக அமைந்திடும். வெறும் தயிரை மட்டுமே கூட பயன்படுத்தலாம் அல்லது தயிருடன் பப்பாளிப்பழக்கூழை பயன்படுத்தினால் உடனடி மாற்றம் தெரிந்திடும். பப்பாளிக்கூழுடன் தயிர் சேர்த்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். இதனை சருமத்தில் இரண்டு லேயர்களாக அப்ளை செய்து நன்றாக காய்ந்ததும் வெது வெதுப்பான நீரில் கழுவிடலாம்.

ஓட்ஸ் 

முகத்தில் சுருக்கம், பரு, அல்லது அதிகப்படியான வறண்ட சருமம் இருப்பவர்கள் ஓட்ஸை முகத்திற்கு பயன்படுத்தலாம். ஓட்ஸை முதலில் தனியாக அரைத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள். அவற்றுடன் காய்ச்சாத பாலை இரண்டு தேக்கரண்டி சேர்த்து குழைத்து முகத்தில் பூசி காய்ந்ததும் கழுவி விடலாம். இதே எண்ணெய் பசையுள்ள சருமம் என்றால் தயிருடன் சேர்த்து முகத்திற்கு பயன்படுத்தலாம்.

Leave a Reply

%d bloggers like this: