சிசேரியன் நிகழக் காரணங்கள் என்ன?

பெண்களுக்கு இருக்கும் மிகவும் சிக்கலான விஷயங்களில் ஒன்று இந்த கர்ப்பகாலம் தான். அதிலும் குறிப்பாக டெலிவரி நேரம் என்பது மிகவும் சவாலான விஷயமாகவே இருக்கும். கர்ப்ப காலம் முழுவதும் நன்றாகவே இருக்கும் கடைசி மாதம் அதாவது பிரசவத்தை நெருங்கும் போது ஏதேனும் சிக்கல் என்று சொல்லி சிசேரியன் நடப்பது வாடிக்கையாகிவருகிறது. 

உண்மையில் அந்தப் பெண்ணையும் குழந்தையின் உயிரையும் பாதுகாக்கும் நடைமுறை தான் என்றாலும் பலருக்கும் இதில் விருப்பம் இருப்பதில்லை. வேண்டுமென்றே மருத்துவர் செய்திருக்கிறார். பணத்தை பறிப்பதற்காக செய்திருக்கிறார் என்றே பலரும் புலம்புகிறார்கள். பிரசவத்தின் போது கடைசி நேரத்தில் என்னென்ன பிரச்சனைகள் வரும். எதற்கெல்லாம் நாம் சிசேரியனை ஒப்புக் கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.  

கால தாமதம் 

பிரசவவலி ஆரம்பித்தவுடன் குறிப்பிட்ட நேரத்திற்குள் குழந்தை வெளியே வந்தாக வேண்டும். முதல் குழந்தை என்றால் அதிக நேரமும் இரண்டாவது குழந்தை என்றால் கொஞ்சம் விரைவிலேயே குழந்தை வெளியே வந்துவிடும். குழந்தை வெளியே வருவதற்காக காத்திருக்கும் நேரம் அதிகரிக்கும் போது குழந்தையின் உடல் நலம் தொடர்ந்து பரிசோதிக்கப்படும். தொடர்ந்து, குழந்தை வெளியே வரமுடியாமல் தவிக்கும் போது குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புண்டு. இதனைத்தவிர்க்க சிசேரியன் செய்யப்படும். 

தேதி தள்ளிப்போவது 

கருவுறும் போது கடைசி மாதவிடாய் சுழற்சி தேதியைக் கொண்டு தான் பிரசவ தேதி சொல்வார்கள். தொடர்ந்து செய்யப்படும் ஸ்கேன்,பரிசோதனைகள் மூலமாக அது உறுதிசெய்யப்படும். ஆனால் பிரசவ தேதி வந்த பின்னரும் வலி வராமல் இருந்தால் மருத்துவ கண்காணிப்பில் வைத்திருந்து பரிசோதிப்பார்கள். அப்போதும் வலிவரவில்லையெனில் அவர்களுக்கு சிசேரியன் செய்யப்படும். 

அதிக நாட்கள் கூடாது 

குழந்தை முழு ஆரோக்கியத்துடன் வளர்வதற்கான கால அளவு 270 நாட்கள். இதற்கு அதிக நாட்கள் கூடுவதோ குறைவதோ கூடாது. இதனால் குழந்தைக்கு பாதிப்புகள் உண்டாகும். நன்கு வளர்ந்த பிறகும் வெளியே வரமுடியாமல் உள்ளேயே தவிக்கும் குழந்தைக்கு மூச்சுத்திணறல் உண்டாகி குழந்தை இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதே சமயம் இது தாய்க்கும் பிரச்சனையை உண்டாக்கும் என்பதால் உரிய காலத்தில் குழந்தையை எடுத்துவிடுவது தான் நல்லது. 

பனிக்குடம் 

தாய்க்கு ஏற்படும் நோய்த்தொற்று, காய்ச்சல் மற்றும் சத்துக்குறைபாடு காரணமாக நீர் இழப்பு ஏற்படலாம். பனிக்குட நீர் குறைவது குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில் குழந்தையின் உயிருக்கே ஆபத்தாய் முடிந்திடும் இதனால் உடனடியாக சிசேரியன் செய்வது அவசியமாகிறது. 

ரத்தகொதிப்பு 

தாய்க்கு இருக்கும் ரத்தகொதிப்பு பிரசவம் சமயங்களில் திடீரென அதிகரித்து விடும். இதனால் வலிப்பு உட்பட சில பிரச்சனைகள் ஏற்படும். இது தாய் சேய் இருவருக்குமே ஆபத்து என்பதால். ரத்தகொதிப்பு அதிகம் உண்டானால் சிசேரியன் செய்வது தான் பாதுகாப்பானது.

பிரசவம் 

தாய்க்கு இடுப்பு எலும்பு சிறியதாக இருப்பது, குழந்தை தலைகீழாக திரும்பால் இருப்பது, தாயின் கர்பப்பை வாய் திறக்காமல் இருப்பது போன்றவை சிசேரியன் செய்ய வழிவகுத்துவிடும். சில சமயங்களில் எல்லாம் சரியாக இருந்தும், வெளியே வரும் போது குழந்தை எங்கேனும் சிக்கிக் கொள்ளும் அப்போது உடனடியாக சிசேரியன் செய்யப்படும்.

Leave a Reply

%d bloggers like this: