குழந்தைகளுக்கு விருப்பமான காஜூ கட்லி அல்லது முந்திரி பர்பி செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு முந்திரி என்றாலே அலாதி பிரியம் தான். உணவில் சேர்க்காமல் தனியாகவே சாப்பிட பிடிக்கும் அவர்களுக்கு. பெரியவர்கள் மட்டும் முந்திரியை விரும்ப மாட்டார்களா என்ன? அனைவர்க்கும் பிடித்தமான ஒன்று தான் முந்திரி. பாயாசம் என்றால் அனைவரும் தேடும் ஒன்று முந்திரி தான். முந்திரியில் வைட்டமின் ஈ, கே மற்றும் பி6 போன்ற வைட்டமின்களும், தாமிரம், பாஸ்பரஸ், துத்தநாகம், மெக்னீசியம், இரும்பு, மற்றும் செலினியம் போன்ற தாதுப்புகளும், ஆன்டிஆக்ஸிடென்ட்களும் நிறைந்திருக்கின்றன. இவை புற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும், உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும், இதயம், நரம்புகள், எலும்பு போன்றவற்றை ஆரோக்கியமாக வைக்கவும், உடல் எடை குறைப்பு, செரிமானம் மற்றும் முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. இங்கு குழந்தைகளுக்கு பிடித்தமான காஜூ கட்லி எப்படி செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

1 முந்திரி பருப்பு – ஒரு கப்

2 சர்க்கரை – அரை கப்

3 நெய் – 3 தேக்கரண்டி

4 தண்ணீர் – கால் கப்

செய்முறை

1 முந்திரி பருப்பை மிக்ஸில் போட்டு தண்ணீர் விடாமல் நன்கு அரைத்து கொள்ளவும்.

2 பாத்திரத்தை அடுப்பில் வைத்து சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்ததும் தண்ணீரில் சிறிது ஊற்றினால், தண்ணீரில் கரையாமல் பாத்திரத்தின் அடியில் தங்கும் பதம் வரும் வரை காய்ச்சவும்.

3 அதனுடன் அரைத்து வைத்த முந்திரி பருப்பு பொடியை சேர்த்து மிதமான சூட்டில் நன்கு கிளறவும். கையில் ஒட்டாமல் வரும் பதத்திற்கு கிளறி இறக்கவும்.

4 ஒரு தட்டில் சிறிது நெய்யை தடவி, அதில் இந்த கலவையை ஆற விடவும்.

5 நன்கு ஆறியதும் நன்றாக பிசைந்து, பூரிக்கு தேய்ப்பதை போல் மாவை மொத்தமாக வைத்து உங்களுக்கு வேண்டிய வடிவில் துண்டிகளாக்கி கொள்ளுங்கள்.

6 சுவையான, ஆரோக்கியமான காஜூ கட்லி அல்லது முந்திரி பர்பி தயார்.

இதை குழந்தைகளுக்கு மாலை நேர திண்பண்டமாக கொடுக்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதோடு, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். 

Leave a Reply

%d bloggers like this: