சிறுதானியங்களில் அதிகளவு சத்து நிறைந்து உள்ளது வரகு. பண்டைத் தமிழர்கள் உட்கொண்டு வந்த வரகு, தற்போது செட்டிநாட்டுப் பகுதியில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. வரகின் பயன்களையும், சத்துக்களையும் உணர்ந்து வரகில் வெல்லப் பணியாரம், அப்பம், கஞ்சி என வெரைட்டியான உணவுகளைச் சமைக்கின்றனர். அரிசி உணவைக் காட்டிலும் வரகு தானியத்தின் மூலம் உடலுக்குக் கூடுதல் வலு கிடைக்கும். இதை குழந்தைகளுக்கு அளிப்பதால், அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் உடல் வலிமை பெற்று வளர்வர்.
என்னென்ன சத்துக்கள்..?
அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது. புரதம், கால்சியம், வைட்டமின் பி ஆகியன இருக்கின்றன. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.
தினமும் ஒரு வகை சிறுதானியங்களை குழந்தைகளின் உணவில் சேர்த்து கொடுப்பது மிகவும் நல்லது. அப்படி சேர்க்க வேண்டிய சிறுதானிய கஞ்சியை எப்படி செய்வது என்று இப்பதிப்பில் பார்க்கலாம்..!
தேவையான பொருட்கள்
வரகு அரிசி-¼ கப், பூண்டு-10 கல், சுக்கு-ஒரு துண்டு, சீரகம்-1 தேக்கரண்டி, வெந்தயம்-1 தேக்கரண்டி, பால்-1 கப், உப்பு-தேவைக்கேற்ப, சின்ன வெங்காயம்-தேவைக்கேற்ப.

செய்முறை
1. பூண்டை தோல் உரித்து வைக்கவும்; சுக்கை தட்டி வைக்கவும்.
2. சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. வரகு அரிசியை சுத்தம் செய்து ஒரு டம்ளர் தண்ணீரில் வேக வைக்கவும்.
4. வரகு அரிசி பாதி அளவு வெந்ததும், பூண்டு பல், சுக்கு, சீரகம், வெந்தயம், பால் சேர்த்து வேக விடவும்.
5. நன்றாக வெந்து குழைவாக வந்ததும் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி இறக்கவும்.
6. சத்தான வரகு கஞ்சி தயார்.. இதன் மீது வெங்காயம் தூவி குழந்தைகளுக்கு அளிக்கவும்.
இதில் சேர்க்கப்பட்டுள்ள பூண்டு, சுக்கு, வெங்காயம் போன்றவை குழந்தைகளின் உடற்செயலிய மாற்றத்திற்கு பெரிதும் உதவும். சிறுதானியமான வரகு உங்கள் சிறு குழந்தைக்கு பெரும் பலத்தை அளிக்கும். 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படாதா என்று மருத்துவரை கலந்தாலோசித்து விட்டு அளிக்கலாம்….
மேலும் எங்கள் பதிவை படித்து தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். அல்லது வலதுபக்கம் ஸ்வைப் செய்யவும்