கர்ப்பிணிகள் உணவை தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்

ஒரு பெண்ணின் கர்ப்பம் அவளின் குடும்பம், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்த கூடிய ஒன்று. அவர்கள் அனைவரும் அந்த பெண்ணை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள விரும்புவார்கள். அவர்களுக்கு வேண்டியதை எல்லாம் கொடுப்பார்கள். சாப்பிட விரும்புபவற்றை எல்லாம் சாப்பிட அனுமதிப்பார்கள். ஆனால், சில பெண்கள் உடல் எடை அதிகரிக்கும், அழகு பாதிக்கப்படும் என்று கருதி சாப்பிடுவதை தவிர்த்து விடுவார்கள். சிலருக்கு உணவுண்ண பிடிக்காமலும் இருக்கலாம்.   

கர்ப்பகாலத்தில் உணவை சரியாக சாப்பிடவில்லை என்றால், உங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தை தான் முதலில் பாதிக்கப்படும். உங்கள் குழந்தை பாதிப்படைய கூடாது என்பதை மனத்தில் கொண்டாவது, உணவை தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதத்தில் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டியது அவசியம். இங்கு கர்ப்பகாலத்தில் உணவை தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி பார்க்கலாம்.

1 கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டால், கருவில் இருக்கும் சிசு இறப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும். இது மிகவும் அரிதான ஒன்று தான். இருந்தாலும், இது போன்று ஏற்பட வாய்ப்புள்ளதால், கர்ப்பிணிகள் உணவில் அக்கறை எடுத்து கொள்ள வேண்டியது அவசியம்.

2 கர்ப்பகாலத்தில் சரியாக சாப்பிடவில்லை என்றால், ஊட்டச்சத்து குறைபாட்டினால் குழந்தைக்கு நரம்பு மண்டல கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், இது குழந்தையின் மூளை மற்றும் தண்டுவட வளர்ச்சியை பாதிக்கும். கர்ப்பகாலத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்பது சிறந்தது.

3 கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகள் எடுத்து கொள்ளும் உணவு அவர்களது குழந்தைக்கும் சேர்த்து தான் என்பதை மனதில் கொள்ள வேண்டும். நீங்கள் சரியாக உணவு எடுத்துக் கொள்ளாமல் தவிர்த்தால், குழந்தை மிக குறைவான எடையில் பிறக்க வாய்ப்புள்ளது. குழந்தை பிறந்த பின்னும் குழந்தையின் எடை ஒரு வருடம் வரை அதிகரிக்காமல் இருந்தால், அது குழந்தையின் இறப்பிற்கும் வழிவகுக்கும்.

4 கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் போதிய ஊட்டச்சத்துக்களுடன் இல்லாவிட்டால், பிறக்கும் குழந்தை மிகவும் எடை குறைவில் பிறக்கும். குழந்தை பிறக்கும் போது சரியான உடல் எடையில் இல்லாமல், ஒரு வருடம் வரையிலும் அப்படியே இருந்தால், அக்குழந்தை விரைவில் இறக்கும் வாய்ப்புள்ளது.

5 கர்ப்பிணிகளின் உடலில் வைட்டமின்கள் மற்றும் இதர சத்துக்கள் குறைவாக இருந்தால் குழந்தையின் வளர்ச்சியை தாமதப்படுத்தும். ஏனெனில் குழந்தையின் வளர்ச்சிக்கு போதிய சத்துக்கள் இல்லாவிட்டால், குழந்தை எப்படி ஆரோக்கியமாக வளர்ச்சி பெற முடியும்.

6 பெண்கள் கர்ப்ப காலத்தில் சரியாக சாப்பிடாமல் இருப்பது, போதிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் கலோரிகள் பற்றாக் குறையினால் குறைப்பிரசவம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் 2200 கலோரிகளையும், 2 மற்றும் 3 ஆவது மூன்று மாத காலத்தில் 2300-2500 கலோரிகளையும் உட்கொள்ள வேண்டும்.

தினமும் தவறாமல் மூன்று வேளை கட்டாயம் சாப்பிடுங்கள். இதனால் குழந்தைக்கு சீரான அளவில் சத்துக்கள் கிடைத்து, குழந்தையின் வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியமே குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளுங்கள். பெரும்பாலும் பழங்கள் மற்றும் காய்களை அதிக அளவில் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

Leave a Reply

%d bloggers like this: