திருமணமாகி புது வாழ்க்கைக்குள் கணவருடன் நுழைந்த நீங்கள் சமாளிக்க வேண்டியது, உங்கள் புது வாழ்க்கையை மட்டுமல்ல; உங்கள் கணவரின் தாயான, மாமியாரையும் தான். மாமியார் தன் பிள்ளையின் மனைவியான உங்களை முழு மனதுடன் மகளாய் காண சில நாட்கள், வாரங்கள், மாதங்கள், ஏன் வருடங்கள் கூட ஆகலாம். அதுவரை நீங்கள் அவரை பொறுத்து, சமாளித்து வாழ்க்கைக் கடலில் எதிர்நிச்சல் போட கற்றுக் கொள்ள வேண்டும். அனைத்து மருமகள்களும் தங்கள் மாமியாரிடத்தில் கீழ்கண்ட 5 விஷயங்களை கூற விரும்புகின்றனர். அவற்றை பற்றி இந்த பதிப்பில் காணலாம்…
1. யாரும் சிறந்தவரில்லை..!
இந்த பாரினில், எந்த மானுடரும் நிறைகளை மட்டும் கொண்டவராய் விளங்குவதில்லை; மனிதர்கள் சில குறைகளையும் கொண்டுள்ளனர். அதேபோல் தான், ‘மாமியாரே! என்னிடமும் சில குறைகள் இருக்கும்; நீங்கள் அந்த குறையை மட்டும் பார்த்து, பெரிதுபடுத்தாது, என்னிடம் உள்ள நிறைகளையும் காண பழகுங்கள்’ – மருமகளின் மனக்குமுறல்.
2. நமது சண்டை..
நானும் நீங்களும் சண்டையிடலாம், வாக்குவாதம் கொள்ளலாம் அது நமக்குள் இருக்கும் தனிப்பட்ட விஷயம்; அதை ஊர் முழுவதும் பரப்பத் தேவையில்லை. நமக்கு பிடித்தமானவரிடம் தான் கோபப்படவும், சண்டையிடவும் முடியும். நாம் என்னதான் சண்டையிட்டுக் கொண்டாலும், நீங்கள் எனக்கு தாய் பேன்றவர், நான் உங்களுக்கு மகள் போன்றவள்.
3. புரிதல்..
நீங்கள் என் மேல் பாசம் காட்டவில்லை எனினும், என்னை புரிந்து கொள்ளவாவது முயற்சி செய்யுங்கள். ஏனெனில் ஒருவர் மீது மற்றவருக்கான புரிதல், அவர்களின் உறவினை பலப்படுத்தும்.
4. வீட்டின் இராஜாங்கம்..!
‘வீட்டில் அனைத்து முடிவுகளையும் நீங்கள் தனித்து எடுப்பது சரியான நடைமுறையல்ல. நானும் அந்த வீட்டின் அங்கம். எனக்கும் என் கருத்துக்களை கூறும் அதிகாரமும், முடிவெடுக்கும் அதிகாரமும் உள்ளது என்பதை உணருங்கள்..! என்னை வேலைக்காரி போல் நடத்துவதை நிறுத்துங்கள்.’ – மருமகளின் மனவேதனை.
5. என்னுடையதும் உங்களுடையதே!
‘திருமணமான பின் நான் உங்கள் மகளே! என்னுடைய அனைத்து பொருட்களும் நகைகளும் உங்களுக்கும் சொந்தமானதே! இவ்வாறு நான் பரந்த மனதுடன் இருக்கையில், எனக்கு என் கணவர் மீதுள்ள அதிகாரத்தை ஏன் பறிக்க எண்ணுகிறீர் மாமியாரே!’ – மருமகளின் மனக்குறை.