உடல் எடை குறைப்பின் போது நாம் செய்யும் தவறுகள்..!

நம்மில் நிறைய பேர் உடல் எடையை குறைக்க படாதபாடுபடுவோம். இதற்காக, சமூக வலைத்தளங்கள், செய்தித்தாள்கள், நாளிதழ்கள் ஆகியவற்றில் தேடியிருப்போம். அவற்றில் குறிப்பிடப்பட்டவைகளை செய்து பார்த்திருப்போம். ஆனால் எதுவும் பலனளித்திருக்காது. இதற்கு நாம் சாப்பிடும் உணவுகள் கூட காரணமாக இருக்கலாம்.

குறிப்பாக குழந்தை பிறந்த பின் பெண்களின் உடல் எடை கணிசமாக அதிகரிக்கும். இது பெண்களை மனதளவில் பாதிக்கும். சரி, உடல் எடையை குறைக்க பரவலாக சொல்லப்படும் சில விஷயங்களை பார்ப்போம்.

1) எண்ணெய்யில் பொறித்த உணவுகளை சாப்பிட கூடாது.

2) குறைந்த அளவு உணவே சாப்பிட வேண்டும்.

3) தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

4) சாக்லேட் சாப்பிட கூடாது.

5) அதிகமாக பழச்சாறு அதாவது ஜூஸ் குடிக்க வேண்டும்; அது ஆரோக்கியமானது கூட.

மேல் கூறியவற்றை எல்லாம் செய்தால் கூட உடல் எடை குறையாது. அதற்கு நாம் செய்யும் சில தவறுகளே காரணம். அவை என்னவென்று இப்போது பார்ப்போம்.

முதல் தவறு : எல்லாவற்றையும் செய்வது அல்லது எதுவுமே செய்யாதது

நாம் செய்யும் தவறுகளில் முதன்மையானது என்னவென்றால் எடை குறைப்புக்கு மேற்கூறிய அனைத்து விஷயங்களையும் ஒரே சமயத்தில் செய்வது தான். எடை குறைப்பு என்பது நம் உடலுக்கு புதிதானது என்பதால், முதலில் நம் உடலை அதற்கு தயார் செய்ய வேண்டும். ஒவ்வொரு விஷயமாக பின்பற்றி நம் உடலை அதற்கு பழக்கப்படுத்த வேண்டும். ஒட்டுமொத்தமாக செய்தால் நமக்கு மிஞ்சுவது என்னமோ சோகமும் ஏமாற்றமும் தான்.

இரண்டாவது தவறு : உணவு சாப்பிடாமல் இருத்தல்

உடல் எடையை குறைப்பதற்கு, உங்களுக்கு பிடித்தமான பல உணவுகளை தவிர்க்க சொல்வார்கள். ஒரே சமயத்தில் பல உணவுகளை தவிர்ப்பது என்பது இயலாத காரியம். அது நம்மை ஊக்கப்படுத்தாது. அதனால், உங்களுக்கு பிடித்தமான உணவை தவிர்க்காமல், அதை எடுத்துக்கொள்ளும் அளவை குறைத்து கொள்ளலாம்.

மூன்றாவது தவறு : பழச்சாறு / ஜூஸ்

உடல் எடையை குறைக்க அதிகமாக பழச்சாறு / ஜூஸ் குடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். நீங்கள் இதை பின்பற்றும் முன் சில விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள். பழச்சாற்றில் அதிகளவு சக்கரை உள்ளது. பழச்சாறு உங்கள் பசியை கட்டுப்படுத்தாது. மற்றும் நீங்கள் வழக்கமாக சாப்பிடும் உணவை விட குறைத்த அளவு ஊட்டச்சத்தே பழச்சாறு கொடுக்கும். பழச்சாற்றை வேண்டுமானால் நொறுக்குத்தீனிகளுக்கு பதிலாக எடுத்துக்கொள்ளலாம்.

மேல் கூறிய மூன்று விஷயங்கள் உடல் எடை குறைக்க முயற்சிக்கும் போது நாம் பரவலாக செய்யும் தவறுகள். கார்போஹைட்ரெட் மற்றும் கொழுப்பு நம் உடலுக்கு தேவையானவை. அவை சரியான அளவில் இருந்தால் எந்த பிரச்னையும் இல்லை.

அதேபோல் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமானது. அதற்காக இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை. தினமும் அரைமணி நேரம் நடைப்பயிற்சி செய்தாலே போதுமானது. லிப்ட்டில் செல்வதற்கு பதிலாக படிகளில் செல்லலாம். இந்த மாதிரி சிறு சிறு விஷயங்கள் தான் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஒரு அம்மாவாக நீங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் உங்கள் குடும்பத்தை பாதிக்கும். முக்கியமாக உடம்பை குறைப்பதற்கு சாப்பாட்டில் நீங்கள் செய்யும் மாற்றங்களால் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அவதிப்படுவார்கள். இது வீட்டில் எதிர்மறையான சூழ்நிலை உருவாக வழிவகுக்கும். அதிலும் குழந்தை பெற்ற தாய்மார்கள் இது போன்ற டயட்டை பின்பற்றினால், அது உங்கள் குழந்தையையும் பாதிக்கும்.

உங்களை ஊக்கப்படுத்த ஒன்றை சொல்கிறேன். நீங்கள் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்தால், அடுத்த ஒரு மணி நேரத்திற்கு உங்கள் உடம்பில் உள்ள கலோரிகள் வழக்கத்தைவிட வேகமாக எரிக்கப்படும். ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் உடல் எடையை குறைப்பது நடிகையாக போவதற்காக இல்லை. ஆரோக்கியமாக இருப்பதற்க்காக. இது உங்களுக்கு ஊக்கத்தையும் தன்னம்பிக்கையும் கொடுக்கும். எனவே, மகிழ்ச்சியோடு சாப்பிட்டு மகிழ்ச்சியோடு வாழுங்கள்.  

Leave a Reply

%d bloggers like this: