உங்களுக்கு பிடித்த ஆசிரியர் யார்??

மாதா, பிதா, குரு, தெய்வம் என அனைவரின் வாழ்விலும் ஒரு சிறந்த குரு, நம்முடைய வெற்றிக்கு வித்திடும் வகையில் இருந்திருப்பார். ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள்.

அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளை ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடுகிறோம். வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும். சிறந்த படைப்பாளிகள் மற்றும் உன்னத மனிதர்களாகத் திகழும் ஆசிரியர்களைப் போற்றும் ஆசிரியர் திருநாளைப் பற்றி இப்பதிப்பில் விரிவாகக் காண்போம்.

ஆசிரியர் தின வரலாறு

ஒவ்வொரு மாணவருக்கும் உதாரண புருஷர்களாய் ஆசிரியர்கள் இருப்பார்கள். ஆனால் ஆசிரியர்களின் உதாரணபுருஷராய் விளங்கியவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மட்டுமே.

சாதாரண ஆசிரியராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன், இந்தியக் குடியரசுத் தலைவராகி ஆசிரியர் சமுதாயத்திற்கே கெளரவமும், பெருமையும், பேறும் தேடிக் கொடுத்தவர். தனது பிறந்த நாளை ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாட வேண்டும் என்று அவர் விடுத்த கோரிக்கையை ஏற்ற இந்திய அரசு செப்டம்பர் 5ம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாட உத்தரவிட்டது.

ஆசிரியர் பணி என்றால் என்ன?

ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.

சிறந்த குரு..!

வெறுமனே புத்தகத்தைப் பார்த்து படித்து மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது மட்டும் ஒரு ஆசிரியருக்கு அழகல்ல. வாழ்க்கையை, வாழ்க்கைத் தத்துவத்தை, ஒழுக்கத்தை, கட்டுப்பாட்டை, அறிவை மாணவர்களுக்கு ஊட்டுவதே ஒரு நல்லாசிரியரின் அழகு. அதனினும் மேலாக ஒரு தாயாக, ஒரு தந்தையாக இருந்து மாணவர்களை நல்வழிப்படுத்தும் முக்கியப் பங்கு ஆசிரியர்களுக்கு உண்டு. ஆசிரியப் பணி என்பது ஏதோ வாசித்து விட்டுப் போவதில்லை என்பதை சொல்லாமல் செய்து காட்டி இன்றளவும் இந்திய ஆசிரியர்களுக்கு பேரிலக்கணமாக திகழ்ந்தவர் ராதாகிருஷ்ணன்.

மாணவர்களை தனது பிள்ளைகள் போல பாவித்து அவர்களுக்கு அறிவூட்டிய தாயுமானவன், ராதாகிருஷ்ணன். ஆசிரியராக பணியாற்றுவதை ஒரு வேள்வி போல செய்த ராதாகிருஷ்ணன், மாணவர்களின் சந்தேகங்களை மிகப் பொறுமையுடன் விளக்கி அவர்களை தெளிவுபடுத்தியவர். தன் வீட்டுக்கே வந்து மாணவர்கள் பாடங்களில் சந்தேகம் கேட்கலாம் என்ற உரிமையைக் கொடுத்தவர்.

ஆசிரியர் தினக் கொண்டாட்டம்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் ‘ஆசிரியர் தின’ நன்னாளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி எனப் பல்வேறு போட்டிகளை நடத்தி, மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவார்கள். மேலும், சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வண்ணமாக அவர்களுக்கு விருதுகள் வழங்கி அரசு அவர்களைப் பெருமைப்படுத்தும். மாணவர்களும், அந்நாளில் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி, வாழ்த்துக்கள் தெரிவிப்பர்.

ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர் தான் ஆசிரியர். மேலும், மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து, அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்பதை யாராலும் மறுக்க இயலாது.

இந்த அருமையான நாளில், நாம் இன்று இருக்கும் நிலைக்கு, அன்று நமக்குப் போதனை நடத்திய ஆசிரியர்களே காரணம் என்பதை மறவாமல், நமக்கு தாயினும் மேலாக அறிவுப் பால் புகட்டிய ஆசிரியர்களை நன்றியுடன் நினைவு கூர்வோம். உங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களை சந்திக்கவோ அவர்களிடம் பேசவோ முயலுங்கள், உங்களுக்கு பிடித்த ஆசிரியரின் பெயரை comment ல் பதிவிடவும் மற்றும் அவரை உங்களுக்கு பிடித்ததற்கான காரணத்தை எங்களுடன் பகிரவும்..!

Leave a Reply

%d bloggers like this: